
சமையல் உப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை உலக சுகாதார நிறுவனம் மறுபடியும் கையில் எடுத்திருக்கிறது. 1950களில் இந்தியர்களிடம் அயோடின் குறைபாடு அதிகம் காணப்பட்டது. ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre), ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது அதிகம்.

குறிப்பாக, குழந்தைகள் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக் குறைபாடுகளால் (Cretinism) பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 1962இல் இந்தியாவில் அயோடின் செறிவூட்டப்பட்ட சமையல் உப்பு (Iodised salt) அறிமுகம் செய்யப்பட்டது. அது பயன்பாட்டு வந்த பிறகு இந்தியாவில் அயோடின் குறைபாடு ஏறத்தாழ நீங்கிவிட்டது.

இதனைத் தொடர்ந்து இப்போது இந்தியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உப்பு மீண்டும் ஒரு முதன்மை ஆயுதமாகப் புறப்பட்டிருக்கிறது. காரணம், நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவுக்கும் உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கும் அதிகம் தொடர்பு இருக்கிறது என்பதுதான். அளவுக்கு அதிகமாக உப்பைச் சேர்த்துக் கொள்வதாலேயே உலக அளவில் ஆண்டு தோறும் 20 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது ஒரு சர்வதேசப் புள்ளிவிவரம். இப்படி, ஒவ்வொரு நாட்டின் பொதுச் சுகாதாரத்துக்கு ‘வெடி’வைக்கும் பொருளாகச் சமையல் உப்பு மாறி வருவதைத் தொடர்ந்து, உப்பின் பயன்பாடு குறித்த புதிய வழிகாட்டுதலை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.
உப்பு எவ்வளவு தேவை?
ஒரு நபர் தினமும் 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இதுவரை அறிவுறுத்தி வந்தது. ஆனால், இந்தியர்கள் தினமும் 10 கிராமுக்கும் அதிகமாகவே எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஒரு நபர் தினமும் 2 கிராமுக்கும் குறைவாகவே உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உலகளாவிய நிலைக்குழு (International body) சமீபத்தில் தீவிரமாகப் பரிந்துரைத்துள்ளது. ஆகவே, உலக சுகாதார நிறுவனமும் உப்புப் பயன்பாடு தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
சமையல் உப்பு ஏன் முக்கியம்?
நம் உடலில் ரத்த அழுத்தம், ரத்தச் சுழற்சி ஆகிய இரண்டு அம்சங்களும் இயல்பாக இருக்க வேண்டும் என்றால், உடல் செல் களின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இருக்கிற திரவங்களின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும். சோடியம், பொட்டாசியம் போன்ற அயனிகளின் அளவுகள்தான் நம் உடல் திரவங்களின் அளவுகளைத் தீர்மானிக்கின்றன. இந்த இரண்டு அயனிகளுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இயல்புநிலை மாறினால் அது இதயத்தைப் பாதிக்கும். எப்படி ?
சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு (Sodium Chloride) ரசாயனம்.பொதுவாகவே, சோடியத்துக்கு உடலில் திரவச் சத்தைத் தேக்கி வைக்கிற குணம் உண்டு. நாம் அளவுக்கு அதிகமாகச் சமையல் உப்பைப் பயன்படுத்தும்போது, சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்போது ரத்தத்தில் திரவ அளவு அதிகரிக்கும். சோடியத்தின் வழியாகத் திரவச் சத்தைச் ‘சுமையாகப் பெற்ற ரத்தத்தில், ரத்த அழுத்தம் அதிகரித்துவிட, ரத்தச் சுழற்சி சிரமப்படும்.
அதைத் தொடர்ந்து ரத்தக்குழாய்களில் உள்காயங்கள் (Inflammation) ஏற்படும். இந்தக் காயங்களில் கொலஸ்டிரால் கூடாரம் போடும். அது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும். மேலும், நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தையும் பாதிக்கும். அப்போது சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) ஏற்படும். இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய், இரைப்பைப் புற்றுநோய் போன்ற தொற்றாநோய்கள் அதிகரித்து வருவதற்குச் சமையல் உப்பு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது இதனால்தான்.
Also Read : உப்பு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய் வருமா..? உண்மையை தெரிஞ்சிகிட்டு உஷாரா இருங்க…!
அதேவேளையில் தினமும் 2 கிராம் அளவுக்கு சோடியத்தை எடுத்துக்கொள்ளும் போது, ரத்த அழுத்தம் 4 மி.மீ. வரைக்கும் குறைந்துவிடுகிறது. இதன் பலனால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது; இதய ஆரோக்கியம் மேம்படுகிறது; சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது. இவற்றின் மொத்தப் பலனாக, நாட்டில் தொற்றாநோய்க் கூட்டத்தின் சுமை குறைய வாய்ப்பிருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் உதவுகிறது. இதனாலேயே உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் சமையல் உப்புப் பயன்பாடு தொடர்பாகப் புதிய வழிகாட்டுதலைத் தந்துள்ளது.
மாற்று உப்பு உதவும்
உலக சுகாதார நிறுவனம், ‘உணவில் உப்பைக் குறையுங்கள்’ என்று சமூகத்துக்கு அறிவுறுத்த ஆரம்பித்து மூன்று தசாப் தங்கள் முடிந்துவிட்டன. இதுவரை அது விரும்பிய பலன் கிடைக்கவில்லை. காரணம், மாறிவிட்ட உணவுப் பழக்கத்தால் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட துரித உணவு வகைகளையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆகவே, அயோடின் செறிவூட்டப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்துவதுபோல், சோடியம் மிகவும் குறைவாகவும், பொட்டாசியம் தேவையான அளவுக்கும் கலக்கப்பட்ட மாற்று உப்பை (Lower-sodium salt sub-stitutes – LSSS) மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது அந்நிறுவனம்.
Also Read : சமையலில் சோடா உப்பு பயன்படுத்தலாமா? வயிற்றில் புண் ஏற்படுமா? Baking soda in cooking!
முக்கியமாக, தேசியக் கொள்கை வகுப்பாளர்கள், திட்ட மேலாளர்கள், சுகாதார வல்லுநர்கள் ஆகியோருக்கு சோடியம் குறைவான உப்பு மாற்றீடுகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. மாற்றம் காணும் இந்தப் புதிய உப்பின் தேவையையும், இது அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கத்தையும், பலன்களையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் நம்புகிறது.
பொட்டாசியம் ஏன் அவசியம்?
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சோடியத்தைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சரி. பொட்டாசியம் ஏன் அவசியம்? ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க ரத்தக் குழாய்களுக்கு நெகிழ்வுத் தன்மை அவசியம். அந்த நெகிழ்வுத்தன்மைக்கு பொட்டாசியம் அவசியம். ஆகவே, ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைச் சரியாக வைத்துக் கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். பொட்டாசியம் என்பது காய்கறி/பழங்களில் இருந்து கிடைக்கும் ஒரு தாதுச் சத்து.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்தியர்கள் தினமும் குறைந்தது 500 கிராம் வரைக்கும் காய்கறி/பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் அதிகபட்சம் 200 கிராம் வரைக்கும்தான் இந்தியர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதால், புதிதாக வர இருக்கும் மாற்று உப்பில் பொட்டாசியத்தையும் கலப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. புதிய வகை உப்பின் மூலம் ரத்தத்தில் சோடியத்தின் அளவும் கட்டுப்படும்; உடலுக்குத் தேவையான பொட்டாசியமும் கிடைத்துவிடும்.
ஆக, மொத்தத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை கட்டுக்குள் அடங்கும். அதேவேளையில் பொட்டாசியம் அளவுக்கு மீறினால், அது சிறுநீரகத்துக்கு ஆகாது. ஆகையால், ஏற்கெனவே சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இந்த வழிகாட்டுதல் பொருந்தாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பரிந்துரையின் சாதக பாதகங்களை மத்திய அரசு பகுத்தாராய்ந்து இந்தியாவில் இது அமல்படுத்தப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
Also Read : இனிப்பு எப்போது சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கு முன்பா, பிறகா? Sugar and Digestion!
குறைந்தாலும் ஆபத்து!
ரத்தத்தில் சோடியம் அல்லது பொட்டாசியத்தின் அளவு மிகவும் குறைந்தாலும் ஆபத்து தான். மனக் குழப்பம், பேச்சு குழறுதல், தொடர்பின்றிப் பேசுதல், நடை தள்ளாட்டம், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை சோடியம் குறைந்துபோனதை வெளிக்காட்டும் அறிகுறிகள். உடலில் ஊசிகுத்துகிற உணர்வு, மதமதப்பு, களைப்பு, தசைப்பிடிப்பு, படபடப்பு போன்றவை பொட்டாசியம் குறைந்து போனதை வெளிக்காட்டும் அறிகுறிகள். இந்த நிலைமைகளில் தேவையான அளவுக்கு, சோடியமும் பொட்டாசியமும் கிடைப்பதுபோல சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்; உணவுமுறையைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை.
கட்டுரையாளர் : கு. கணேசன், பொதுநல மருத்துவர்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry