ஒமைக்ரான் அபாயம்! மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது! தடுப்பூசி மட்டுமல்ல, தற்காப்பும் அவசியம்!

0
47

ஒமைக்ரானை எளிதான விஷயமாக மக்கள் எடுத்துக்கொள்வது குறித்து கவலை அடைந்திருக்கிறோம், நமக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் அளவுக்கு இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதை உணர்ந்திருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம், “ஒமைக்ரான் தீவிரமான நோய்த் தாக்குதலை ஏற்படுத்துவதில்லை என்றாலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது, சுகாதார அமைப்புகள் சுதாரிக்காமல் இருக்கும் சூழலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தடுப்பூசி மட்டும் எந்த நாட்டையும் ஒமைக்ரானிலிருந்து காப்பாற்றாது. ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உலக நாடுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பதால், உலக நாடுகள் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளின் திறனைக் குறைக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துவரும் நிலையில், அந்த வைரஸ் திரிபுக்கு எதிராக பைசர் தடுப்பூசி வெற்றிகரமாகச் செயல்படும் என அதன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.

இதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத்தில் 4 பேர், ராஜஸ்தானில் 9 பேர், டெல்லியில் 6 பேர், கர்நாடகத்தில் 3 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கேரளம், ஆந்திரம், சண்டிகர் (ஒன்றியப் பிரதேசம்) ஆகியவற்றில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் நேற்று மட்டும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 7 பேர். இதையடுத்து, அம்மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. டெல்லியில் தொற்றுக்குள்ளான 6 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*