திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா? அனந்தாழ்வார் பெருமாளின் மாமனாரானது எப்படி?

0
66
திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலுக்கு பலமுறை சென்றவர்களுக்குக் கூட, பெருமாள் தாடையில் ஏன் பச்சை கற்பூரம் சாத்துகிறார்கள் என்ற விவரம் தெரியுமா என்பது சந்தேகமே.

2.15 Mins Read : திருமாலின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்ததுடன், பெருமாளின் திருவடிகளே கதி என வாழ்ந்து, அவனின் திருவடிகளை அடைந்தவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். வைணவத்தில் திருமாலின் அம்சமாக கருதப்படுபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பெருமாளை போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 12 பேரையே பன்னிரு ஆழ்வார்கள் என போற்றுகின்றோம். ஆனால் இவர்கள் தவிர ஏராளமான ஆழ்வார்கள் உள்ளனர். இவர்களுள் ராமானுஜர், அனந்தாழ்வார் உள்ளிட்டோரும் அடங்குவர்.

ஆழ்வார்கள் எத்தனை பேர் இருந்தாலும் திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு விருப்பமானவராகவும், திருமலை வரலாற்றில் குறிப்பிடப்படுபவருமாக இருப்பவர் அனந்தாழ்வார். ராமானுஜரின் சீடரான இவர், ராமானுஜரின் உத்தரவின் பேரில் திருமலையில் கைங்கரியம் செய்ய தனது மனைவியுடன் வந்தவர். அவர் தனது குருவின் கட்டளைக்கிணங்க, திருமலையில் தங்கி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்ய சேவை செய்ய பூந்தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக தனது கர்ப்பிணி மனைவியோடு திருமலையில் குளம் ஒன்றை வெட்டுவதற்குத் தொடங்கினார்.

Also Read : விளைச்சல் அதிகரித்தும் உச்சத்தில் காய்கறி விலை! செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மொத்த வியாபாரிகள் அராஜகம் எனப் புகார்!

தனது பக்தனுக்கு அருள் செய்ய நினைத்த பெருமாள், ஒரு சிறுவன் வடிவில் அனந்தாழ்வாரிடம் சென்று, ‘நானும் உங்களுக்கு உதவி செய்யலாமா?’ என்று கேட்கிறார். ஆனால், அனந்தாழ்வார் அதை மறுத்துவிடுகிறார். பெருமாளுக்கு தான் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வேண்டாம் என்று கூறி விடுகிறார்.

இருப்பினும் அனந்தாழ்வாருக்கு தெரியாமல் அவருடைய கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்கிறான் அந்தச் சிறுவன். மண்ணை சீக்கிரமாக மனைவி கொட்டிவிட்டு வருவது அனந்தாழ்வாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்தச் சிறுவன் தனது மனைவிக்கு உதவுவதைப் பார்த்து விடுகிறார். இதைக் கண்ட அனந்தாழ்வாருக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. அந்த சிறுவனை தனது கையிலிருந்த கடப்பாரையால் தாக்குகிறார். இதனால் சிறுவனின் தாடையிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பிக்கிறது. அந்தச் சிறுவனும் அங்கிருந்து ஓடி மறைந்து விடுகிறான்.

மறுநாள் காலை அர்ச்சகர்கள் பெருமாளுக்கு பூஜை செய்ய கதவை திறந்தபோது அலறுகிறார்கள். ஏனெனில், திருப்பதி ஏழுமலையான் தாடையிலிருந்தும் இரத்தம் வடிந்துக் கொண்டிருக்கிறது. அப்போது, ‘அர்ச்சகரே! பயப்பட வேண்டாம். அனந்தாழ்வாரை இங்கே அழைத்து வாருங்கள்’ என்று அசரீரி கேட்கிறது. அனந்தாழ்வார் கோயிலுக்குப் போகிறார். அங்கே பெருமாளின் தாடையிலிருந்து இரத்தம் வருவதை பார்த்துவிட்டு, தனக்கு உதவி செய்ய வந்த சிறுவன் சாட்சாத் பெருமாள்தான் என்பதை உணர்கிறார். இதனால் மிகவும் வருத்தப்பட்டு மனமுருக வேண்டி அங்கிருந்த பச்சைக் கற்பூரத்தை பெருமாளின் தாடையில் வைக்கிறார். உடனே பெருமாள் தாடையிலிருந்து வழிந்த இரத்தம் நின்றுவிடுகிறது. இதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான் இன்றும் திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சைக்கற்பூரம் சாத்தப்படுகிறது.

திருப்பதி பெருமாள் கோயிலில் அனந்தாழ்வார் பயன்படுத்திய கடப்பாரையை இன்றும் உள்ளது. அனந்தாழ்வார் பெருமாளை தாக்கிய கடப்பாரையை இப்போதும் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்ததும், நுழைவு வாயிலின் வலது புறத்தின் மேல் பகுதியில் தொங்கிக் கொண்டிருப்பதை காணலாம். அனந்தாழ்வார் தோண்டிய குளம், ‘அனந்தாழ்வார் குளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமலையின் சிறப்புகளை, வரலாற்றை குறிப்பிடும் போது அதில் அனந்தாழ்வாருக்கும் முக்கிய இடம் உண்டு. அவர் வாழ்ந்த குடில், அவர் அமைந்த நந்தவனம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இப்போதும் தொடர்ந்து பராமரித்து, பக்தர்களின் பார்வைக்காக வைத்து வருகிறது.

Also Read : உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்குன்னு தெரியுமா? ரூ.2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை..! De Activate பண்ண இதமட்டும் செஞ்சா போதும்!

மற்றொரு சமயம், பெருமாளுக்காக தான் அமைத்த நந்தவனத்தில் இரவு நேரத்தில் பூக்கள் சிதறி கிடப்பதை அனந்தாழ்வார் கண்டார். இரவில் நந்தவனத்திற்குள் யாரோ வந்து செல்வதை உணர்ந்த அனந்தாழ்வார், அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். அதே போன்று நந்தவனத்தில் இருவர் உலவுவதைக் கண்ட அனந்தாழ்வார், ஓடிச் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றார். நந்தவனத்தில் உலவுவது பெருமாள், அலமேலுமங்கை நாச்சியார் எனத் தெரியாமல் அவர்களை பிடிக்க முயன்றார். பெருமாள் மறைந்து விட, அலமேலு மங்கையை மட்டும் தனது குடிலில் சிறைப்பிடித்து வைத்தார்.

மறுநாள் பூக்களை பறித்துக் கொண்டு கோவிலுக்கு சென்ற அனந்தாழ்வார், திருமாலின் மார்பில் அலமேலுமங்கை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் நந்தவனத்திற்கு வந்தது பெருமாளும், தாயாரும் தான் என்பதையும், தாயாரை தான் சிறைப்பிடித்து வைத்துள்ளதையும் தெரிந்து கொண்ட அனந்தாழ்வார், பெருமாளை விட்டு எப்போதும் விலகாமல் அவரது திருமாலில் வசிக்கும் தாயாரை, இரவு முழுவதும் தான் பிரித்து வைத்து விட்டதற்காக வருந்தினார். அலமேலுமங்கை தாயார் தனது மகளாக வர வேண்டும் என கேட்ட அனந்தாழ்வார், அலமேலுமங்கைக்கு தந்தையாக இருந்து, அவரை வெங்கடேச பெருமாளுக்கு மணம் முடித்து வைத்தார். இந்த காரணத்தால் அனந்தாழ்வார், பெருமாளின் மாமனார் ஆனார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry