மழை இன்றும் பெய்தால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்!

0
99
Hardik Pandya and MS Dhoni.

16-வது ஐ.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும், ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று போட்டி நடைபெறாமல், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்று நாளான இன்று (திங்கட்கிழமை, இரவு 7.30 மணி) இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் நேற்றிரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

Also Read : இயற்கை வளங்களைச் சுரண்டும் சட்டங்கள்! பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் கண்டனம்!

16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்று நாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்று மழையின் குறுக்கீடு இல்லாவிட்டால், 20 ஓவர்கள் கொண்ட முழு போட்டியை ரசிகர்கள் காண இயலும்.

ஒருவேளை இன்றும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்தால், என்னவாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஒருவேளை மழையின் குறுக்கீடு இருந்தாலும், 11 மணி வரை காத்திருந்து, 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தால், கோப்பை குஜராத் அணிக்கு வழங்கப்படும். ஏனென்றால், லீக் சுற்றுகள் முடியும் போது புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. எனவே இன்றும் மழை இடைவிடாது தொடர்ந்து பெய்தால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கே கோப்பை வழங்கப்படும்.

கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் என நம்புகிறேன். 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு, விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.” என்று பதிவிட்டு உள்ளார்.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

இந்நிலையில், இன்று மழை பெய்யாமல் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும் எனவும், மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆட்டமாக இருக்கலாம் என்பதால், சென்னை அணி வீரர்கள் அவருக்காக கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தோனி மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளார். அது, 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை தோனியை சேரவுள்ளது. சிஎஸ்கே அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று தந்த சிறந்த கேப்டனாகவும், இளம் வீரர்களை சரியாக வழிநடத்தும் தலைவனாகவும் உள்ள தோனிக்கு, சென்னை அணி மிகப்பெரிய கடமைப்பட்டிருப்பதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

சீசன் ஆரம்பிக்கும் முன்பாக இது தோனியின் கடைசி ஐபிஎல் என்று தகவல்கள் பரவ, அவர் விளையாடுவதை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னையிலும் சரி , பிற ஊர்களில் நடைபெற்ற போட்டிகளிலும் சரி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு மைதானங்களுக்கு சாரை சாரையாக படையெடுத்தனர்.

41 வயதான தோனிக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு சீசனில் பேட்டிங் செய்யும் போது ரன் ஓடுவதற்கு சிரமப்படுவதை காண முடிந்தது. ஆனால் கேப்டன்ஸியில் அவரது நுணுக்கங்கள் துளியும் குறையவில்லை. எதிரணி பேட்ஸ்மேன்களை தவறான ஷாட்களை ஆடவைத்து அவுட் ஆக்குவதிலும், எதிரணி வீரருக்கு ஏற்றார் போல் பீல்டிங் செட் செய்து ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதிலும் தற்போது வரை கில்லியாக உள்ளார். தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் சென்னை அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்று அவரை மகிழ்ச்சிகரமாக வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry