இயற்கை வளங்களைச் சுரண்டும் சட்டங்கள்! பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் கண்டனம்!

0
267
இயற்கை வள உரிமைக்கான கருத்தரங்கம்

காடுகள், நிலக்கரி, ஆற்றுமணல், நீர்நிலை என இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்படும் சட்டங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் `இயற்கை வள உரிமைக்கான கருத்தரங்கம்’ சென்னையில் சனிக்கிழமை(27 MAY 2023)நடைபெற்றது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மாசிலாமணி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Also Read : 10  மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து! தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்!

நிகழ்வில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாசிலாமணி, “பழங்குடி மக்களை வனத்தைவிட்டு வெளியேற்றி, காடுகளை, கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றவே வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023-ஐ மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதேபோல, தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா-2023-ஐ கொண்டுவந்திருப்பது ஜனநாயக விரோதம்.

நீர்நிலையை அழித்து பரந்தூர் விமான நிலையம் கொண்டுவரும் முயற்சிகளை இது இன்னும் எளிதாக்கும். மக்கள் போராட்டத்தால் இதை தடுத்து நிறுத்த வேண்டும். வனத்தை அழித்து வளம் எதற்கு? வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சி எதற்கு? வெளியில் இயற்கை விவசாயம் என்று பேசிவிட்டு செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் விநியோகிக்கின்றன”இவ்வாறு அவர் பேசினார்.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ. சண்முகம் பேசும்போது, “பரந்தூர் விமான நிலையம் நிச்சயமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமாகப் போவதில்லை. அதானிக்கும் இல்லை. அதானிக்குச் செல்வாக்கு குறைந்தால் இன்னொரு கார்ப்பரேட் முதலாளிக்குத்தான் கொடுக்கப்படும். வன பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க அரசாங்கம் பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டங்களையெல்லாம் அரசாங்கங்கள் விவாதம்கூட செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற என்ன காரணம்? அப்படி என்ன அவசரம்?

சில மாதங்கள் காலஅவகாசம் கொடுத்து அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து பொதுமக்கள் உட்பட அனைவரும் அறியும் வகையில் செய்துகொடுத்தால் என்ன? இயற்கை மற்றும் மக்கள் விரோத சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் திரும்பப் பெறும் வரை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்தார்.

Also Read : நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

கருத்தரங்கில் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், “1956-லேயே மாநிலப் பட்டியலிலிருந்த நிலம், காடு எல்லாம் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டன. பொதுப்பட்டியல் என்றாலே மத்திய அரசுக்குத்தான் அதிகாரம். நிலக்கரி ஒப்பந்தத்துக்காக மோடியும், அதானியும் ஒரே விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இப்போது அதானிக்குக் கடலில் 2000 ஏக்கர் கொடுத்திருக்கிறார்கள். காட்டுப்பள்ளி, விழிஞ்சம், விசாகப்பட்டினம் என அனைத்து துறைமுகங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநில காடுகளெல்லாம் வேதாந்தா நிறுவனத்துக்கு தாரைவார்க்கப்பட உள்ளன. இப்போது எல்லா இடங்களிலும் காடுகள், மலைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஈஷா மையம், பல்வேறு ரிசார்ட்டுகள் போன்ற தனியார் ஆக்கிரமிப்பினால் யானைகள், விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.

காவிரி டெல்டாவாவது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் நெய்வேலி நிலையோ மோசம். இப்போது பொதுத்துறையாக இருக்கும் என்.எல்.சி நாளை தனியாருக்குப் போகும். 1986-ல் பிரிட்டனில் அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. அதுவும் முதலாளித்துவ கன்சர்வேடிவ் கட்சி செய்தது.

இருந்தபோதும் அங்கு மின்வெட்டு என்பதே துளியும் இல்லை. அதை இங்கும் செய்யவேண்டும். வெயில் அதிகம் உள்ள நம் நாட்டில் சோலார் முறை மின்சாரத்துக்கு மாறவேண்டும். இங்கிருக்கும் வளங்கள் எல்லாமே கார்ப்பரேட்டுக்குச் செல்கின்றன. எல்லா ஆட்சியாளர்களுமே கார்ப்பரேட்டைப் பாதுகாக்கிறார்கள். வலுவான மக்கள் போராட்டங்கள்தான் நம்மையும் நம் இயற்கை வளங்களையும் காப்பாற்றும்!” என்றார்.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

இவரைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, “தனியார் முதலாளிகள்தான் மணல் குவாரிகள் அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றார்கள் என்பதால், அரசே மணல் குவாரிகள் நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இப்போது அரசின் பொதுப்பணித்துறையோ மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விட்டு, மணற்கொள்ளைக்குத் துணைபோகிறது. இதையெல்லாம் கேட்டால் தொழில்துறை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்த ஆட்சியில் மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும் இதுதான் நடக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

நிகழ்வில் இறுதியாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வரலாம், எந்த நிறுவனங்களை வேண்டுமானாலும் தொடங்கலாம், திட்டங்களை வேண்டுமானாலும் கொண்டுவரலாம். இங்கிருக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டு சொல்லலாம் என்ற நிலைமை இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் உலகமயமாதல், தனியார்மயமாதல், தாராளமயமாதல் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைதான்.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

பெரு முதலாளிகள் சுரண்டி கொழுப்பதைத்தான் இவர்கள் `வளர்ச்சி’ என்கிறார்கள். இவர்கள் சொல்லும் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி அல்ல. பன்னாட்டு தரகு முதலாளிகளின் வளர்ச்சி; அதானி உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-ம் இடம் பிடித்ததுதான் இவர்கள் சொல்லும் இந்திய வளர்ச்சி.

நினைக்கவே முடியாத வகையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம். எண்ணிக்கை முக்கியமல்ல; போராட்டங்கள் மூலம்தான் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா, புதிய ஆற்றுமணல் குவாரிகள், பழுப்பு நிலக்கரி சுரங்க திட்டங்கள் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Featured Videos from Vels Media

நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry