ஆகஸ்ட் 2-ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கா, நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “1947 சுதந்திரத்திற்குப் பிறகு, 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்தே தமிழகச் சட்டமன்றத்தின் உண்மை வரலாறு துவங்குகிறது. எனவே சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழகச் சட்டமன்றத்திற்கான வயது 69 மட்டுமே. ஆனால் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் சட்டமன்ற பேரவை போன்ற அமைப்பு– கீழவை (Assembly) 1936-லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. அந்த 16 வருடத்தையும் கணக்கிலே சேர்த்துக் கொண்டால் கூட தமிழகச் சட்டமன்றத்திற்கு வயது 85 மட்டுமே. மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஆண்டு விழாவிற்கான சரியான அளவு கோளாக எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால், 2021-ஆகஸ்ட் 2-ம் தேதியை தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அது என்ன கணக்கு என்றும் தெரியவில்லை. வேறு எங்கிருந்து தொடங்கினாலும் இவர்களின் நூற்றாண்டு கணக்கு தப்புக் கணக்காகவே இருக்கிறது.
’பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்ததாலும், ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரப்படுத்தியதாலும், 1920-ல் ஆங்கிலேயர்களின் சீர்திருத்தத் திட்டங்களின் படி கொண்டுவரப்பட்ட Legislative Council தேர்தலில், காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அப்போது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளடங்கிய சென்னை இராஜதானியத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ’நீதிக்கட்சி’ இந்திய சுதந்திரத்திற்கு எதிராகவும், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மூன்று முறை தொடர்ச்சியாகத் தனிப்பெரும்பான்மையுடனும், நான்கு மற்றும் ஐந்தாவது முறையாக கூட்டணி ஆட்சியையும் அமைத்தது.
இன்று ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கும் நீதிக்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் கூட, நீதிக்கட்சியின் வழிவந்தவர்கள் தான் நாங்கள் என திமுகவினர் மார்தட்டி கொள்கிறார்கள். அந்த நீதிகட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டுதான் 1921. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், சட்டமன்ற வளாகத்திற்குள் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும், குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
முதன்முறையாக சட்டமன்ற அவை அமைந்த 1861-ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், 1961-லேயே நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த மேலவையின் (Council) நீட்சி 1986, நவம்பர்-1ல் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில், அதன் 125வது ஆண்டோடு முடித்து வைக்கப்பட்டது. ஒருவேளை Indian Council Act கொண்டுவரப்பட 1861-லிருந்து கணக்கிட்டாலும் கூட 2021 ஆம் ஆண்டு 160 ஆண்டு விழாவாக இருக்குமே தவிர அது நூற்றாண்டு விழாவாக இருக்காது.
எனவே எந்த விதத்திலும் தமிழகச் சட்டமன்ற விழாவை நூற்றாண்டு விழாவாக கணக்கில் கொள்ள முடியாது. ஏற்கனவே இதேபோல கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இருமுறை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு விட்டது. அதுவும் எதற்கு என்றும் தெரியாது. எனவே ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு நூற்றாண்டு விழா எனும் பெயரில் நடக்கும் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவை வேறு ஒரு கணக்கிற்கான விழாவாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
திராவிட ஸ்டாக்கிஸ்டுகளால் கொண்டாடப்படக்கூடிய இவ்விழா சென்னை மாகாணம் ’தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் நடந்த 1969-லிருந்து கணக்கிடப்பட்டாலும் 52-வது ஆண்டு விழாவாக மட்டுமே கொண்டாட முடியும். ஆனால் 2021-ல் தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலத்தான் உள்ளது.
நமது தேசத்தை ’ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிடும் மாநில அரசை மத்திய அரசின் உள்துறையோ, மாநில ஆளுநரோ அழைத்து கண்டிக்கவும், அறிவுறுத்தவும் இல்லையே என இந்த தேசத்தின் மீது அப்பழுக்கற்ற பற்று கொண்ட தேச அபிமானிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், முதல்வரின் தந்தை முத்துவேல் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் குடியரசுத் தலைவர் வருவதாகச் சொல்லப்படும் செய்திகள் எண்ணற்ற தேச அபிமானிகளின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.
தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், கருணாநிதி படத் திறப்பு விழாவும் ஒன்றல்ல; இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள். ஆனால் இரண்டையும் ஒன்றாகப் பொருத்த நினைக்கிறார்கள். இதில் பல விஷயங்களில் மர்மம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது 1921 ஆண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் அதைக் கணக்கிட்டால் மட்டுமே 2021 ஆம் ஆண்டு 100ஆவது ஆண்டாகும். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட தான் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகிறாரா? அல்லது முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவிற்கா? அல்லது மத்திய அரசோடு ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்து இணக்கத்தை உண்டாக்குவதற்கான புதிய முயற்சியா? அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா? என்பதை போன்ற பல கேள்விகள் எழுகின்றன. எனவே வெவ்வேறு கணக்கீடுகளுக்கு வேறு வேறு கணக்குகளைப் போட்டுக் கொண்டு சட்டமன்றத்திற்கு இல்லாத நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி ஏமாற்ற வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கண்டனக் குரலாக உள்ளது” என்று அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry