உ.பி. அரசின் கல்வி கொள்கை தமிழகத்துக்கு எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் அஸ்தமனமாகும் கல்வித்துறை!

0
261

உத்தரப்பிரதேச மாநில யோகி அரசின் கல்விக் கொள்கையினை தமிழ்நாடு அரசு வரவேற்று பாராட்டுவதில் உறுதியாக இருக்கிறது என்பதை கல்வியாளர்களால் உணரமுடிகிறது என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் தொடர்பாக மூன்றரை லட்சம் ஆசிரியர் சமுதாயத்தின் உள்ளத்தின் பிரதிபலிப்பினை நேரலையாக பிரதிபலிக்கின்றோம்.

வா. அண்ணாமலை

முந்தைய ஆட்சியாளர்களால் கல்வி நிர்வாக கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு உத்தரப்பிரதேச மாநில கல்வி நிர்வாக அமைப்பினை ஏற்படுத்தி விட்டார்கள். மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்தில் கல்வி நிர்வாக கட்டமைப்பு ஒரே மாதிரியாகத்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி காலத்தில் கே.ஏ. செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பணியில் சேர்ந்தார். நீண்டகாலமாக பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை என தனித்தனியாக இயங்கி வந்த கல்வி நிர்வாக கட்டமைப்பினை முற்றிலுமாக சீர்குலைத்து, உத்தரப்பிரதேச மாநில கல்வி கட்டமைப்பு போன்று கொண்டுவந்து அவர் அமல்படுத்தி சென்றுவிட்டார்.

கே.ஏ. செங்கோட்டையன், பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை சேர்க்கக்கூடிய மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று 11 மாதம் நிறைவடையப் போகிறது. உத்தரப்பிரதேச மாநில கல்வி அமைப்பு நமக்கு வேண்டாம். தமிழ்நாட்டின் கல்வி அமைப்பு தான் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்களும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களும் தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்து விண்ணப்பம் கொடுத்து வந்தார்கள்.

கோப்புப் படம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளி கல்வி துறை மானியக் கோரிக்கையில் அரசாணை 101, 108 ரத்து செய்யப்பட்டு தொடக்க கல்வித்துறை தனியாகவும், பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அமைப்பு தனியாகவும் செயல்படும் அறிவிப்பு வரும் என்று மூன்றரை இலட்சம் ஆசிரியர் சமுதாயமும் கொள்கைப் பார்வையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசும்போது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி அரசின் கல்வி நிர்வாக அமைப்பினை நாங்கள் அமல்படுத்தினோம். அதைத்தான் நீங்களும் இன்று பின்பற்றி வருகிறீர்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டார்.

Also Read : பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? மனிதநேயமின்றி செயல்படும் பள்ளிக்கல்வி ஆணையர்! கூனிக்குறுகுவதாக குமுறும் ஆசிரியர்கள்!

வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்ற ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு இவற்றை வரவேற்கிறோம். ஆனால் எமிஸ் இடர்பாட்டால் நான்கு மணிநேரத்திற்குள் நடைபெற வேண்டிய ஆசிரியர்கள் கலந்தாய்வு நான்கு நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது என்பதை எண்ணி மறக்க முயன்றாலும் முடியவில்லையே…? அதற்கு ஒரு சுயபரிசோதனை வேண்டாமா? 9464 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு ஆறுதல் அடையக்கூடிய அறிவிப்பாகும். 27813 நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், திறன்மிகு வகுப்பறை அமைத்தல், பள்ளி தலைமை ஆசிரியரில் சிறந்த நூறு பேருக்கு விருது, சிறந்த பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குதல் இவையெல்லாம் போட்டி மனப்பான்மையை வளர்க்கக் கூடிய அறிவிப்புகள் தான். ஆனால் இதையெல்லாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டிய ஆசிரியர்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லையே என்று வேதனையுருகிறோம்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பார்கள். ஒரு ஆசிரியரின் மனதை காயப்படுத்திட எத்தனை சித்திரவதைகள்..? அன்றாடம் எமிஸ் சித்திரவதை, இன்னொரு பக்கம் புள்ளிவிவர சித்தரவதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அடைவுத்திறன் சோதனை அதிரடி பார்வைகள் அணிவகுத்து நிற்கின்றன. எழுத்தறிவிக்கின்ற இறைவனுக்கே இந்த சோதனையா..?

நிதி சார்ந்த கோரிக்கைகள் தான் முடியாது என்கிறீர்கள். கிராம வழக்கப்படி சொல்ல வேண்டுமானால் பத்து பைசா கூட செலவில்லாத ஒரு கோரிக்கை. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் என பெயர்ப் பலகையினை மாற்றி அரசாணை வழங்குதல். பள்ளிக் கல்வித் துறையும், தொடக்கக் கல்வித் துறையும் பழைய முறைப்படியே தனியாக செயல்படுதல், இதில் என்ன சிரமம் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி அரசின் கொள்கையினை தமிழ்நாடு அரசு வரவேற்று பாராட்டுவதில் உறுதியாக இருக்கிறது என்றுதான் கல்வியாளர்களால் உணரமுடிகிறது.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் வெறுப்புணர்வின் உச்சகட்டத்தில் உள்ளார்கள் என்பது மட்டும் ஆட்சியின் மீதும், கட்சியின் மீதும் தடம் மாறாத கொள்கை உணர்வு கொண்டவன் என்ற முறையில் தெரியப்படுத்தி கொள்கிறோம். எது எப்படியோ இந்திய ஆட்சி பணி அலுவலர்களை நம்பி முதலமைச்சர் கல்வித்துறையினை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அடுத்த தேர்தலுக்குள் 10 விழுக்காடு ஆசிரியர்களின் வாக்கு வங்கியினைக் கூட விட்டுச் செல்ல மாட்டார்கள். யோகி அரசின் கல்விக் கொள்கையினை, சமூக நீதியினை கட்டிக் காத்து வரும் அரசில் இன்னமும் நீடிக்க விடலாமா? 110 விதியின் கீழாவது விடியல் பிறக்குமா? என்று நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry