மீண்டும் ஒரு லாக்அப் டெத்? கல்லூரி மாணவன் மர்ம மரணம்! சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் கொடுத்தவர்கள் எங்கே?

0
93

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார், மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், தனது நண்பரான சஞ்சய் உடன் மாலை 4.30 மணிக்கு அந்த வழியாக முதுகுளத்தூர் சென்று கொண்டிருந்தார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.  மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டிப்பிடித்து உள்ளனர். மணிகண்டனை மட்டும் சம்பவ இடத்தில் இருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட போலீஸார், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை அழைத்து சென்ற நிலையில், வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். பிறகு படுக்கையில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மணிகண்டன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என கீழத்தூவல் காவல்நிலைய போலீஸார் கூறுகின்றனர். இந்தநிலையில், மணிகண்டன் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் #justiceformanikandan என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இவற்றைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு, மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உடலை வாங்காமல் நேற்று கிராமத்திற்கு திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து அவரது உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

முதுகுளத்தூரில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்திருக்கிறார்.

சாத்தான்குளம் சம்பவத்துக்காக குரல் கொடுத்தவர்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன் என்று பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணத்துக்கு திமுக பதில் சொல்லியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், காவல்துறை பணிக்கு தேர்வான மணிகண்டன், அதே காவல்துறையால் வாழ்க்கையை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்துக்காக குரல் கொடுத்த கனிமொழி எம்.பி., இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார் எனக் கேட்டுள்ள காயத்ரி ரகுராம், மணிகண்டன் குடும்பத்துக்கு திமுக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் போலீசார் அடித்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் மணிகண்டனை போலீசார் யாரும் தாக்கியதாக காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*