அச்சுறுத்தும் கோவிட்-19 ‘2-வது அலை’! புதிய கடும் கட்டுப்பாடுகள் என்னென்ன? முழுவிவரம் இதோ!

0
7

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை நீக்கி கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையில் தொற்று பரவுகிறது.  இதன் காரணமாக தமிழகத்தில் ஸ்மார்ட் லாக் டவுண் போடப்படும் என வேல்ஸ் மீடியா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read : வேகமாகப் பரவும் கொரோனா! ‘ஸ்மார்ட் லாக் டவுன்அமல்படுத்த தமிழக வருவாய்த்துறை திட்டம்! 

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று பங்கேற்றார். இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிப்பதாக அரசு கூறியுள்ளது.

*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச போக்குதவரத்துக்கான தடை தொடரும்.

*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளின்றி முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

*திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10-ந் தேதி முதல் தடை.

*கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை.

*மாவட்டச் சந்தைகளிலும் சில்லறை விற்பனைக்கு தடை.

* அரசு தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, சீட்டுகளில் மட்டுமே பயணிகள் அனுமதி.

*புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளிலும் நின்று பயணிக்கத் தடை.

*காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய நகை, ஜவுளி கடைகள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

* உணவகங்கள், தேநீர் கடைகளில், 50% இருக்கைகளில் மட்டும், இரவு 11 மணி வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி. உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.

* கேளிக்கை விடுதிகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

*மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை நடத்த அனுமதி.

* திருமணத்தில் 100 நபர்களும், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரையிலும் மட்டும் பங்கேற்க அனுமதி.

* நீச்சல் குளங்கள், பயிற்சிகளுக்காக செயல்பட அனுமதி. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி. திருவிழாக்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தடை.

* சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதி. படப்பிடிப்புகளில் கலந்துகொள்வோர் RTPCR சோதனை செய்துகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பணிக்க அனுமதி.

* வெளி நாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு .பாஸ் கட்டாயம்.

வரும் 10-ந் தேதியில் இருந்து வரும் 30-ந் தேதி வரை இந்தக் கட்டுபாடுகள் அமலில் இருக்கும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த் தொற்றை குறைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மண்டலங்களிலும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போர், வெளியே வராத வகையில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry