வேகமாகப் பரவும் கொரோனா! ‘ஸ்மார்ட் லாக் டவுன்’ அமல்படுத்த தமிழக வருவாய்த்துறை திட்டம்!

0
13

கொரோனா முன்னெச்சரிக்கை மக்களிடம் காணாமல் போய்விட்டது. இதனால் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சாத மக்கள், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்று மட்டுமே பயப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம், மிக அதிக அளவில் இருக்கிறது.  2-வது அலை தொடங்கிவிட்டது என்பதை, கடந்த மாதம் 16-ந் தேதியே, வேல்ஸ் மீடியா சரியாக கணித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

Also Read : தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை! சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை! மாஸ்க் அணிய அறிவுரை!

Also Read : கொரோனா 2-வது அலை! கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசியில் சிறந்தது கோவாக்சினா? கோவிஷீல்டா?

பெருந்தொற்றால் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் பெருந்தொற்று பரவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. வாக்குப்பதிவு நாளான நேற்று, 3,645 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காதது, மாஸ்க் அணிய மறுப்பது, கை கழுவாதது, சானிடைஸர் உயபோகிக்காதது போன்றவையே இதற்குக் காரணமாகும்.

ஸ்மார்ட் லாக் டவுண்

பெருந்தொற்று முதல் அலையின்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவித்தபிறகே அவர்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கினர். எனவே, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த விரும்பாத தமிழக அரசு, ஸ்மார்ட் லாக் டவுணை அமல்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

File Image

ஸ்மார்ட் லாக் டவுண் அமல்படுத்தப்பட்டால், மருந்தகங்கள் தவிர, இதர வணிக நிறுவனங்கள், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் போன்றவற்றை திறக்க அனுமதிக்கப்படாது. மதக் கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படும். சென்னையில் மட்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்கிறது.

ஜுலை, ஆகஸ்ட்டில் உச்சமடையும்

கொரோனா முதல் அலையின்போது இருந்த எச்சரிக்கையும், விழிப்புணர்வும், மக்களிடையே முற்றிலுமாக காணாமல் போய்விட்டதாக தமிழக சுகாதாரத்துறை கூறுகிறது. மாஸ்க் அணிய மறுப்பதே அதிகமான பரவலுக்குக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொற்று பரவல் உச்சமடையலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இந்த 2-வது அலையில், வைரஸின் வீரியம் குறைந்திருந்தாலும், பரவல் வேகம் அதிகரித்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முதல் அலையில், 100-ல் 10 பேருக்கு பரவியது என்றால், தற்போது 100-ல் 70 பேர் வரை தொற்று பரவுவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதாக நிதி அயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே. பால்ம் கூறியுள்ளார். இரண்டாம் அலையை தடுப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது, அடுத்த நான்கு வாரங்களில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்படுத்தும் பயம்

கோவிட்-19 தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இதன்காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பெரிய சுணக்கம் நிலவுகிறது. முன் களப் பணியாளர்கள், பின்விளைவுகள் இல்லை என நம்புவோர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இதனூடே, கோவாக்சின் தடுப்பூசிதான் சிறந்தது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே கோவிஷீல்ட் செலுத்திக்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

இதுபற்றி மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது, “கோவாக்சின் என்பது ஆர்ட்டிஃபீஷியல் வைரஸ், இது கோவிட் வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கக் கூடிய புரோட்டீன், இதனால் எந்த வியாதியும் வராது. கோவிஷீல்ட் எதிர்ப்பு சக்தியை அதிகம் உருவாக்கும். இதுவும் புரோட்டீன்தான். கோவிஷீல்ட் இயற்கையானது, கோவாக்சின் செயற்கையானது. இதுதான் இரண்டுக்குமான வித்தியாசம். இரு மருந்துகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. 2022 வரை கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால், தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறுகின்றனர்.   

மினி அல்லது மைக்ரோ லாக் டவுண்

நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் தொற்று அதிகரித்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் சரியாக கடைப்பிடித்தால் தொற்றுபரவலை வெகுவாகக் குறைத்துவிட முடியும். அப்படி, பரவல் விகிதம் குறைந்தால், மினி லாக்டவுண் அமல்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். அதாவது, கொரோனா பாதித்தவர்கள் உள்ள தெருக்களை மட்டும் மூடுவது. லாக் டவுண் தேவையா? எந்த விதமான லாக்டவுணாக இருக்க வேண்டும்? என்பது, அரசுக்கு மக்கள் தரும் ஒத்துழைப்பில்தான் உள்ளது.   

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry