தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை! சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை! மாஸ்க் அணிய அறிவுரை!

0
6

தமிழகத்தில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 2-வது அலை உருவாகியுள்ளது

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் தொற்று மீண்டும் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் 500-க்கும் குறைவாக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 800- கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை சுமார் 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 56 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோர் 5 பேர் என மொத்தம் 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு,  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூரில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடங்கியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிளஸ் 2 தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், 9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இது குறித்து பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நம்ப வேண்டாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளாக அமைந்துள்ள பள்ளிகளில் மட்டும் தேவைக்கேற்ப விடுமுறை அளிக்கப்படும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே அதிக அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பாத்ல, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இயங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது. 9,10,11 வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் அலட்சியமே தொற்று பரவல் அதிகரிக்கக் காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் எந்த அளவுக்கு கடைப்பிடித்தார்களோ அதே அளவுக்கு இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று பதிவான புதிய நோயாளிகள் எண் ணிக்கையில் 78 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறுகிறது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையில்  மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி வாயிலாக அவசர ஆலோசனை  நடத்த உள்ளார்

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனிமனித இடைவெளி சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவது இல்லை. அதேபோல், பொதுமக்களும் சானிடைசர் பயன்படுத்துவது, கை கழுவுவது போன்றவற்றை மறந்துவிட்டனர். மீண்டும் ஒரு லாக் டவுன் இருக்காது என நம்பினாலும், மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே 2-வதுலை தமிழகம் முழுவதும் பரவாமல் தடுக்க முடியும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry