அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை கைவிட்டார் தினகரன்! முடிவை சொல்லாமல் சசிகலா சஸ்பென்ஸ்!

0
36

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு சசிகலா சிறை சென்றதும், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ,அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

இதற்கு தடை விதிப்பதுடன், தங்களை பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என அறிவிக்கக்கோரி, இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் அதை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றியது. .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தான் துவங்கியுள்ளதால், இந்த வழக்கிலிருந்து விடுவித்து கொள்வதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேட்டபோது, அதுபற்றி ஆலோசிக்க உள்ளதாக சசிகலா தரப்பு தெரிவித்தது. எனவே இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சசிகலா சமீபத்தில் அறிவித்தார். எனவே, அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கில் இருந்து அவரும் தன்னை விடுவித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சசிகலா அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி துவங்கி தினகரன் தேர்தலில் போட்டியிடுவதால், இந்த வழக்கில் அவர் மனுதாரராக இருப்பது சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே வழக்கில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 9ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, வழக்கை தொடர்ந்து நடத்துவதாக சசிகலா அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry