தேர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து! 11 பேர் உயிரிழந்த பரிதாபம்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

0
417

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. ஆண்டு தோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகியிருக்கிறது.

சுமார் 15 அடி உயரம் கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகளுக்காக தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர் பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில் அப்பர் மடத்திற்கு செல்வதற்காகச் சாலையின் வளைவில் பக்தர்கள் தேரை இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரில் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேல் பகுதியில் உயர் மின் அழுத்தக் கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மின்சாரம் பாய்ந்த பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.

தேர் வருவதற்காகச் சாலையில் தண்ணீர் ஊற்றியுள்ளனர் அதிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் வரை உயிரிழந்தனர். மின் விபத்தில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை முன்பு திரண்டு ஊர் மக்கள் கதறி அழுதனர். 94-வது ஆண்டாக இந்த தேர் விழா நடைபெற்று வருகிறது. இது வரை ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவிற்கான விபத்து ஏற்பட்டு விட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். உயிரிழந்த 11 பேருக்கும் சட்டப்பேரவையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் தேர் விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் நினைவுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார். அத்துடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து அவர் நலம் விசாரிக்கவும் உள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry