மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி! தடுப்பூசி சான்று, ஆன் லைன் முன் பதிவு கட்டாயம்!

0
13

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில், தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது.

சபரிமலையில் மண்டல பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திருவாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இதன்படி தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

விர்ச்சுவல் கியூ முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதில், பெயர், விலாசத்துடன், தரிசனத்துக்கான நாள், நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவின்போது பயன்படுத்தும் அடையாள அட்டையை, நிலக்கல் செக் போஸ்ட்டில் உள்ள காவல்துறையினரிடம் காண்பிக்க வேண்டும். வழக்கம்போல நிலக்கல் வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து KSRTC பேருந்துகள் மூலம்தான் பம்பைக்கு செல்ல வேண்டும்.    

அதேபோல், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்று அல்லது ஓரிரு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட RT-PCR நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே பக்தர்கள் பம்பைக்கு அனுமதிக்கப்படுவார்கள். பம்பை ஆற்றில் நீராட தடையில்லை. தரிசனம் மற்றும் நெய் அபிஷேகத்தின்போது பக்தர்கள் திரளாக கூடுவதைத் தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் பக்தர்கள் தங்கவோ அல்லது கூட்டமாக கூடவோ அனுமதி இல்லை. நாள்பட்ட நோய் உள்ளவர்களும், கோவிட்-19 தொற்றில் இருந்து அண்மையில் குணமாணவர்களும் முகாம் மருத்துவர்களின் அனுமதியை பெற்றே பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல வேண்டும்.

இந்த ஆண்டும் எரிமேலி அல்லது புல்மேடு வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லைபேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தேவையான அளவுக்கு பொருட்கள் வைக்கும் அறை, கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry