கடலூர் திமுக எம்.பி. தலைமறைவு! கொலை வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை!

0
3

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ‘TRV’ ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் கடலூர் மக்களவைத் தொகுதி திமுக  எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில், கோவிந்தராஜ் மகன் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்தபோது, உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read: கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார் திமுக எம்.பி.? சட்டப் பாதுகாப்பு இல்லை என்பதால் ராஜினாமா செய்ய அழுத்தம்

பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கோவிந்தராஜ் உறவினர்கள், எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை, ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில், திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரமேஷைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேரிடமும் நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜினாமா செய்துவிட்டு சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளுமாறு திமுக தலைமை ரமேஷிடம் அறிவுறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, தலைமறைவாக உள்ள ரமேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry