ஒரே மாதத்தில் 10 கொலைகள்..! செல்லரித்துப்போன சட்டம் ஒழுங்கு! நாங்குநேரி செல்வதைத் தவிர்க்கும் அன்பில் மகேஸ்!

0
89

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முனியாண்டியின் மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்றவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர்.

Also Read : செறிவூட்டப்பட்ட அரிசிப் பையில் எச்சரிக்கை வாசகம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

அப்போது பள்ளியில் மாணவர்கள் சிலர் தன்னை தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில், வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த 3 பேர் அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாங்குநேரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் விரைவாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Also Read : குடிநீர் வசதியை செய்து கொடுப்பதில் கூட பாரபட்சம்! பட்டியலின மக்களை விடியா திமுக அரசு வஞ்சிப்பதாக ஈபிஎஸ் கண்டனம்!

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீஸார் பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரோ பாதிக்கப்பட்ட மாணவரையும், அவரது சகோதரியையும் நேரில் சந்திக்காதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் இருந்துகொண்டு மாணவரின் கல்விச்செலவை ஏற்பதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருப்பதை கல்வியாளர்கள் கண்டித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், தோழமை சுட்டியுள்ளார். தமிழக அரசைக் கண்டிக்காமல், இந்தச் சம்பவத்திற்கும் சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என்ற ரீதியில் அவர் டிவிட்டரிவ் பதிவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறிய மோதல் தொடர்பாக ஏற்படும் முன்விரோதம் கடைசியில் கொலையில் முடிகிறது. ஒரு மாதத்தில் மட்டும் பேட்டை மயிலப்பபுரம் பிச்சையா, சுத்தமல்லியில் கொம்பையா, மேலவீரராகவபுரம் மகேஸ், மேலநத்தம் மாயாண்டி, வீரவநல்லூர் அருணாச்சலகுமார் உட்பட 10 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

Also Read : வாட்ஸ்அப்-பில் புது அப்டேட்! ஸ்கிரீன் ஷேரிங்; Google Meet, Zoom போல குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்!

கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு கீழுள்ளவர்கள். தற்போது இவர்களது குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் கொலைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், உளவுப்பிரிவு காவல்துறையினர் தங்கள் கடமையை செய்யத் தவறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கூறும் சமூக ஆர்வலர்கள், “உளவுத்துறையின் நுண்பிரிவில் இடம் பெற்றுள்ள காவல்துறையினர் பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

கொலை வழக்கில் தேடப்படுவோர் நீதிமன்றங்களில் சரணடையும் நிலையும் உள்ளது. தகவல் அளிக்காமல் உறங்கிப்போன உளவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறமையான காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும். மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று கொலை சம்பவங்கள் நடந்தால் மக்களிடையே அச்ச உணர்வு தலைதூக்கும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry