அச்சுறுத்தும் ‘மின்சார சட்டத் திருத்த மசோதா’! தனியார்மயமாகும் மின்துறை! ஊசலாட்டத்தில் இலவச மின்சாரம்!

0
100

மின்சாரச் சட்டம் 2003இல் பல திருத்தங்களைச் செய்து, புதிய திருத்தச் சட்ட மசோதாவை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மக்களின் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘மின்சார சட்ட திருத்த மசோதா 2022’ -ஐ மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் இன்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே ஏகபோக உரிமை இருக்கும் என்பதால், அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ‘மின்சார சட்ட திருத்த மசோதா 2022’ல் அச்சத்தை தரும் அளவுக்கு என்ன இருக்கிறது? இந்த திருத்தப்பட்ட மசோதாவின்படி, மாநில வாரியங்களுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனிடம் அனுமதி பெற்று தனியார் நிறுவனம் நேரடியாக மின்விநியோகத்தில் ஈடுபடலாம்.

ஒரே பகுதியில் இரண்டு மின்சார விநியோக நிறுவனங்கள் செயல்பட மசோதா அனுமதிக்கிறது. தற்போது தொலைத்தொடர்புத் துறையில் எப்படி இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகள் ஒரே பகுதியில் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்படுகிறதோ, அதைப்போல மின் விநியோக நிறுவனங்கள் செயல்படும். இதனால் சிறப்பான சேவை மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.

Also Read : இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகள்! கேரளாவின் பொய் பரப்புரைகள்! அம்பலப்படுத்தும் விவசாயிகள் சங்கம்!

ஏற்கனவே மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு இருக்கிறது. உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் தனியார் வசம் உள்ளது. இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு கிடைக்கும் மின்சாரம், ஏழை மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பறிபோகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மசோதாவானது மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குவதுடன், மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையமே மாற்றியமைக்க அதிகாரம் வழங்குகிறது. அதேநேரம், இலவச மின்சாரம் அல்லது சலுகைகள் அளிக்கும்போது, மானியத்தை மாநில அரசுகள் மின் விநியோக நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என சட்டத் திருத்த மசோதாவில் கூறியுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

Also Read : தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும்! கோத்தபய நிலை ஸ்டாலினுக்கு ஏற்படலாம்! எச்சரிக்கும் ஈபிஎஸ்!

மின் உற்பத்தி, தேசிய அளவில் மின் விநியோகம், மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, மின் விற்பனை மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றில் மசோதா மாற்றங்களை செய்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையைப் போலவே, மின்துறையிலும் தனியார் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் இந்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் என்று எதிர்க்கட்சிகள் திடமாகக் கூறுகின்றன.

கோப்புப் படம்

மசோதா குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக, பாஜக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுகதான். நிச்சயம் மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சிதான் இது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என எந்த சரத்தும் மசோதாவில் இடம்பெறவில்லை.” என்று கூறியுள்ளார்.

‘மின்சார சட்ட திருத்த மசோதா 2022’க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry