3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம்! விதி மீறல் நடப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

0
905

தமிழகத்தில் உள்ள 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.

இந்த ஏலத்தில் பங்கேற்க 2-ந் தேதி முதல் 18-ந் தேதி (இன்று) வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பார்களை ஒதுக்கீடு செய்வதற்காக மற்றவர்களுக்கு விண்ணப்பம் மறுக்கப்படுவதாகவும், இதன் பின்னணியில் ஆளும்கட்சியினர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், விண்ணப்பம் வழங்க மறுப்பதாக முறையிடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும்பட்சத்தில் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Also Read : ஆட்சிக்கு எதிராக செயல்படும் பள்ளிக் கல்வி ஆணையர்! ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!

கட்டிட உரிமையாளர்களிடம் ஆட்சேபனையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்றால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். இந்த சான்றிதழை பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களை ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இதனிடையே, ஒவ்வொரு பார் உரிமையாளர்களும் 2 மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தி உள்ளதாக கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எல்.சுப்பிரமணியன், ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முந்தைய ஆட்சியில் 2808 பார்கள் மட்டுமே இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பார்களின் எண்ணிக்கை 3240 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry