காவிரிப் பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு, நிலத்தை அரசு கையகப்படுத்தித் தராது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள், காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரிப் படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர மறுப்பது வருத்தமளிக்கிறது.
Also Read : வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் முதலாவது சுரங்கம் மற்றும் இரண்டாவது சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, பறித்துக் கொடுத்திருக்கிறது. அதற்கு எதிராக ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உழவர்களின் நலனைக் காக்க பாட்டாளி மக்கள் கட்சியும் களமிறங்கி அறப்போராட்டங்களை நடத்தி வருகிறது.
நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, புதிய நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம்; அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்தித் தர மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கைப் பிரகடனம் செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் தமிழக அரசு செய்யாத நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, அருகிலுள்ள காவிரிப் பாசன மாவட்டங்களிலும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது குறித்த புதிய அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அவை குறித்து கருத்து தெரிவிக்காமல் அரசு அமைதி காக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3ஆவது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3,556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் 21.07.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.
Also Read : முறைகேடுகளைத் தடுக்க எங்களுக்கும் சீருடை வேண்டும்! காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் வேண்டுகோள்!
என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம் கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன. இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்
படக்கூடும்.
இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. ஐந்தாவது திட்டமான மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றிற்கு மிக அருகில் அமைகிறது. வடசேரி மின்திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக் கோட்டை, கீழ்க் குறிச்சி, பரவக்கோட்டை, அண்டமை, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேலி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
மைக்கேல்பட்டி மின்திட்டம் அரியலூர் மாவட்டம் அழிசுக்குடி, பருக்கல் உள்ளிட்ட 4 கிராமங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரிப் பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது. மாறாக, பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரிப் பாசன மாவட்டங்கள் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீரழிவுப் பகுதியாக மாறிவிடக்கூடும்.
Also Read : சாராயக் கடை வருமானத்தை நம்பி அரசு இயங்கலாமா? முதலமைச்சருக்கு அபலைப் பெண்ணின் கண்ணீர்க் கடிதம்!
மத்திய அரசு அடுத்தடுத்தடுத்து அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தன. ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காவிரி பாசன பகுதிகளை மீட்பதற்காக, அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாமக, அதன் பின் தமிழக அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து, அப்பகுதிகளை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது.
அத்தகைய வளம் மிக்க பகுதிக்கு நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக மீண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுவதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருப்பதை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். இவற்றுக்கான ஏலத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நவம்பர் 3ம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால், இந்த நிலக்கரி திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறி முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது.
சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் கூடுதலான இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் அனுமதியும், ஆதரவும் இல்லாமல் இவற்றை செய்திருக்க முடியாது. இவ்வளவுக்கு பிறகும் இந்தத் திட்டங்கள் பற்றி தங்கள் கவனத்திற்கு வரவில்லை; இப்படிப்பட்ட திட்டங்களே இல்லை என்றெல்லாம் தமிழக அரசு கூறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது காவிரி பாசன மாவட்ட மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலாகும். புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும் என்பது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டங்களுக்கான தேவை எதுவுமே தமிழகத்திற்கு இல்லை என்பது தான் உண்மையாகும். இன்றைய நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட் ஆகும். அதில் 800 முதல் 1000 மெகாவாட் மட்டுமே என்.எல்.சி மூலம் கிடைக்கிறது. அதுவும் கூட சுற்றுச்சூழலைச் சீரழித்து பெறப்படும் மின்சாரம் ஆகும். இது எந்த வகையிலும் தமிழகத்தின் மின்சூழலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அதுமட்டுமின்றி தமிழகத்தின் மொத்த நிறுவுதிறன் 35,000 மெகாவாட் ஆகும். அதை செம்மையாக பயன்படுத்தினாலே தமிழகத்தின் மின்சார தேவையை நிறைவேற்றிவிட முடியும். அத்தகைய சூழலில் என்.எல்.சி. மின்சாரமோ, புதிய நிலக்கரித் திட்டங்களோ தேவைப்படாது. இவற்றையும் கடந்து 2030ம் ஆண்டுக்குள் 15ஆயிரம் மெகாவாட் அளவுக்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. 5000 மெகாவாட் அளவுக்கு அனல் மின்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2030ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது தேவையே இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை செயல்படுத்துவது நமக்கு நாமே பேரழிவை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதாகும். அதை அரசு செய்யக்கூடாது. புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், பசுமை மின்சாரத் திட்டங்களுக்கு மட்டும் தான் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் உணவுக் கோப்பையாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு ஆதரவாக இருக்கக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத் திட்டம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது; அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry