2023 – 2024ம் கல்வி ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் 28.04.2023 அன்று வெளியிட்டார். 2023- 24ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு, காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு உள்ளிட்ட தேதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நாட்காட்டியில் தமிழ்ப் புத்தாண்டு புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகும். ஆனால், சித்திரை 1ம் நாள் தமிழ்ப் புத்தாண்டு என அரசாணையில் இருக்கிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த புத்தகத்தினை கல்வி… pic.twitter.com/7WEGKMOS4t
— Anbil Mahesh (@Anbil_Mahesh) April 28, 2023
கடந்த ஆண்டு தை முதல் நாளான பொங்கல் திருநாளுக்கும், தமிழ்ப் புத்தாண்டுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார். ஆனால் இந்த ஆண்டு தை மாதத்திலோ, சித்திரை மாதத்திலோ அவர் வாழ்த்துக் கூறியதாக தெரியவில்லை. அதேநேரம், இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 2023 ஆம் ஆண்டில் மக்கள் சமூக-பொருளாதார வளம் பெற வேண்டும், சாதிய, மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், மக்களின் நல்வாழ்வை மேலும் மேம்படுத்த தனது அரசு பாடுபடுகிறது என்றார்.
21.03.2023 அன்று தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும் ஒற்றுமையும் வலுப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இதையொட்டியே 2023- 24ஆம் கல்வியாண்டுக்கான கல்வி நாட்காட்டியும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 01/01/2024-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 14/01/2024 -ந் தேதி விடுமுறை எனவும், 15/01/2024-ந் தேதி பொங்கல் பண்டிகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 09/04/2024 அன்று தெலுங்கு புத்தாண்டு எனவும், 14/04/2024 சித்திரைத் திருநாள் / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் என்றும் அச்சிட்டுள்ளனர். இவர்கள் சொல்வது போல, தை மாதத்திலும் அதாவது ஜனவரி மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடவில்லை, மக்கள் அனைவரும் கொண்டாடும், சித்திரை மாதத்தில் அதாவது மார்ச் மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டையும், தெலுங்குப் புத்தாண்டையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழ்ப் புத்தாண்டை மட்டும் நிராகரித்தது எதனால் என்ற கேள்வி எழுகிறது. இதை கவனக்குறைவு என்று ஒதுக்கிடமுடியாது. ஏனென்றால் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியே வெளியிட்டதாக அமைச்சர் குறிப்பிடுவதால், தமிழ்ப் புத்தாண்டு திட்டமிட்டே புறக்கணித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
Also Read : தமிழ் முதல் மாதம் ‘தை’யா? ‘சித்திரை’யா? அம்பலப்படும் திராவிடவியலாளர்களின் புரட்டு! வேல்ஸ் பார்வை!
கடந்த ஆண்டு ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.
தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி. தமிழைப் பேசும் போது இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன், ‘தமிழ்’ என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது”. என்று பேசினார்.
இவ்வாறு தமிழைப் போற்றிப் புகழும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில், கல்வித்துறை நாட்காட்டியில் தமிழ்ப் புத்தாண்டு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இது முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்ததா? அப்படியானால், முதலமைச்சர் இதையெல்லாம் கவனிப்பது இல்லையா? என்ற கேள்விக்கு தமிழக அரசுதான் விளக்கம் சொல்ல வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry