தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

0
168
Getty Image

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்..! சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்தக் குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. அந்த அளவிற்கு இது பிரபலமான வாக்கியம். குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்காக மட்டுமே இந்த வாக்கியத்தைப் பெற்றோர் உபயோகபடுத்தினார்களே தவிர, அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலேயே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

நாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்காக மட்டும் இல்லை. இதில் எவ்வளவு பெரிய ஞானக் கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. எந்த வாக்கியத்தை வைத்துக் கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ, அதே வாக்கியம் நம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?

Also Read : குருவைக் கண்டறியும் எளிய வழிமுறை! ஞானிக்கு குருவான நாய்! சிந்தனையைத் தூண்டும் சிறிய கதையுடன் எளிமையான விளக்கம்!

ஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணைக் குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் பெற்றோரோ ஒருக்காலும் சாமி வந்து கண்ணைக் குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள். இந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள்.

புறத்தில் இருந்து அதாவது வெளியில் இருந்து சாமி கண்ணைக் குத்தி விடும் என்று குழந்தைகள் நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம், சாமி வெளியில் இருந்து குத்துவதில்லை! உள்ளே இருந்து தான் குத்திக் கொண்டிருக்கிறது! ஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான்.

நாம் ஏதாவது தப்பு செய்தால் நம் கண்ணைக் குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்தக் குத்த நமக்கு கிடைப்பதே துன்பம். இதுவே இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் நமது முன்னோர்கள், தப்புச் செய்யாதே அப்படி தப்புச் செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.

திருமூலர்

எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி இதைச் சொல்ல முடியும்? திருமூலர் திருமந்திரத்தில் எவ்வளவு வெளிப்படையாக இதைச் சொல்கிறார் என்று படித்தால் புரியும்!

“கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே”
பாடல் – 2067

“மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இந்தப் பாடலுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்! எப்போதும் நம் கண்மணி ஒளியாகத் துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து, நம் செயலுக்குத் தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே, அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்!

இதை உணர்ந்தால், அறிந்தால் தப்புச் செய்வானா?! இந்தப் பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! அப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்தக் கடவுள் நம் கண்களிலும் தன்னைக் கண்பிக்கான்றானே!

Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

என்ன அதிசயம் இது! நம் கண்ணிலயே அவனைக் காணாலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்து உள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்!

தாம் கண்காணிப்படுவதைக் கண்டவர் களவு செய்ய மாட்டார்! கங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறு செய்யாதே மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார். இனி தப்புச் செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணைக் குத்தாமல் பார்த்து கொள்வோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry