புதுச்சேரி சட்டசபைக்கு 2026ல் தேர்தல் நடக்குமா? புதுவையில் தொடங்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்! எம்எல்ஏக்களுக்கு ஜாக்பாட்..!

0
1438
Why is the Modi government proposing to extend the tenure of Puducherry's Assembly? This analysis breaks down the objectives and possible outcomes for the region.

நடப்பு ஆண்டில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசம் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், 2026ல் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

2026ல் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்கள், அரசியல் சூழலை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டவை. குறிப்பாக அரசியல் பன்முகத்தன்மை கொண்ட இந்த மாநிலங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதில் முக்கியத் திருப்பமாக, ‘சோதனை எலி’ என டெல்லி பாஜகவினரால் அழைக்கப்படும் ‘புதுச்சேரி யூனியன் பிரதேசம்’ தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Also Read : ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029 முதல் அமல்படுத்த திட்டம்! 17 மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கும் குறைவான ஆட்சியே இருக்கும்!

‘சோதனை எலி’ என ஏன் அழைக்கப்படுகிறது என்றால், குறைந்த பரப்பளவு, மற்றும் தனித்துவமான நிர்வாக கட்டமைப்பு காரணமாக, முக்கியமான மத்திய அரசு திட்டங்கள் முதன்முதலில் புதுச்சேரியில் பைலட் திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு சேவைகளுக்கான மானியப் பட்டுவாடாவை நேரடியாக குடிமக்களின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தும் Direct Benefit Transfer, 2013 ஆம் ஆண்டு புதுச்சேரியில்தான் அமல்படுத்தப்பட்டது. இந்த வரிசையில் ஆதார் அட்டை திட்டமும் அடங்கும். கூடுதலாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான முயற்சிகளை புதுச்சேரியில்தான் மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் தேசிய திட்டங்களுக்கான சோதனைக் களமாக புதுச்சேரி மாறிவருகிறது. இங்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.

இந்த அடிப்படையில்தான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை புதுச்சேரியில் தொடங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், இது “நேரத்தின் தேவை” என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பாஜகவும், மோடி அரசும் எந்தளவு தீவிர முனைப்பு காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரிலேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக தீவிரமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே மசோதா நிறைவேறும். மக்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. மாநிலங்களவையில் தற்போது 6 நியமன உறுப்பினர்கள் உள்பட 234 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 113. நியமன உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். இதன் அடிப்படையில், பெரும்பான்மைக்கு 117 தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 119 என்ற மேஜிக் நம்பரை கையில் வைத்துக்கொண்டு, நூலிழையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. இண்டி கூட்டணிக்கு 85 எம்.பி.க்களே உள்ளனர்.

பிஜேபி கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஜனதா தளம் கட்சிகள் ஒத்துழைத்தால் மசோதா எளிதில் நிறைவேறிவிடும். அதேநேரம், பாஜக தயவை எதிர்நோக்கியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிகள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தாலோ, அவைக்கு வராமல் இருந்தாலோ அது மோடி அரசுக்கு சாதமாகவே இருக்கும். எனவே, வரும் கூட்டத்தொடரிலேயே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று மோடி – அமித் ஷா கூட்டணி திடமாக நம்புகிறது.

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறினாலும், இந்தியா முழுமையிலும் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில், 50% சட்டமன்றங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். மொத்தம் 28 மாநிலங்கள், சட்டப்பேரவை உள்ள டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் என மூன்று யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து 31 மாநிலங்கள் உள்ளன.

அக்டோபர் 2024 நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 19 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஆட்சி செய்கின்றன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட், அசாம், திரிபுரா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 12 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்கிறது.

பிகார், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, மேகாலயா, சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசம் பாஜக கூட்டணி வசம் இருக்கிறது. ஆக மொத்தம், 20 சட்டமன்றங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் உள்ளன. மொத்தமுள்ள 31 மாநிலங்களில், 20 மாநிலங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வசம் இருப்பதால், 50% மாநிலங்களின் ஒப்புதலை பெறுவது பாஜகவிற்கு ஒரு பொருட்டே அல்ல.

Also Read : ஜீன்ஸ் பேன்ட் வரலாறு! தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி? சின்னஞ்சிறிய பாக்கெட்டின் பின்னணி!

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறி, 50% மாநிலங்களின் ஒப்புதலை பெற்றுவிடும் சூழலில், மோடி திட்டமிட்டபடி 2029ல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வந்துவிடும். மத்திய அரசு புதிதாக எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை பரிசோதனை செய்யக்கூடிய மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசம்தான் இதிலும் முதல் இடம் பிடிக்கும். இதற்கு புதுச்சேரி பாஜக கூட்டணி அரசின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும். இந்த முடிவை அரசியல் ரீதியாக அணுகும்போது, 2026ல் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், புதுச்சேரி தவிர்த்து மற்ற எந்த மாநிலங்களும் பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என்பது புலப்படும்.

இதன் மூலம் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள், நிர்வாக சிக்கல்களை கண்டறிந்து அதற்கேற்ப திருத்தங்கள் கொண்டு வர முடியும் என்பதே மோடி – அமித் ஷா கூட்டணியின் கணக்காக இருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என புதுச்சேரி பாஜக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் முழுமூச்சாக மேலிடத்தில் பேசிப்பார்த்தார்கள்.

பாஜக தலைமையும் அந்த மனநிலையில்தான் இருந்தது. ஆனால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டதை மனதில் கொண்டு, ரங்கசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற மோடி – அமித் ஷா விரும்பவில்லை. ஏனென்றால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டதை அமல்படுத்த, பாஜக கூட்டணி அரசு இருப்பதே சரியாக இருக்கும் என்று கருதிய நிலையில்தான், மேலிடம் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

Also Read : தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!

தற்போதைய சூழலில் புதுச்சேரியில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது? என்பது பாஜகவுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. உள்கட்சி குழப்பமும் நிலவும் சூழலில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியை நீட்டித்தால், பாஜகவுக்கு அது சாதகமாகவே இருக்கும் என மோடி நம்புகிறார். மேலும், தென்னிந்தியாவில் அழுத்தமாக கால்பதிப்பதுடன், புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைக்க இந்த வியூகம் கைகொடுக்கும் என மோடியும், அமித் ஷாவும் திடமாக நம்புகிறார்கள்.

இதற்கு ஏற்றார்போல, விளம்பர அரசியலை விரும்பாத, நிர்வாக அனுபவம் வாய்ந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், பிரதமர் மோடிக்கும் நெருக்கமாகவும் இருக்கிறார். இது தங்களுக்கு கூடுதல் பலம் என பாஜக நம்புகிறது. ஒரு வேளை தற்போதைய ஆட்சியை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதில் அரசியல் சிக்கல் ஏற்பட்டால், ஓராண்டோ அல்லது ஒன்றரை ஆண்டோ நீட்டித்துவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதும் பாஜகவின் திட்டத்தில் இருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படு, தற்போதைய எம்எல்ஏக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry