ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால், திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை! சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கையில், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மனம் மகிழும் வண்ணம் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என திமுக அரசு தரப்பில் செய்திகள் வெளிவந்தது அரசுக்குத் தெரியுமா? அரசை நடத்துவது முதலமைச்சர் தலைமையில் உள்ள அமைச்சரவையா? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள நிதித்துறை முதன்மைச் செயலாளரா?
ஓய்வூதியர்களின் குறைகளை கேட்பதற்காக பிரிக்கப்பட்ட துறை மீண்டும் இணைக்கப்பட்டது. பணி ஓய்வு பெறும் பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்கள் குறைகளை அளிக்கவும், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும், 1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதித்துறையில் இருந்து தனியாகப் பிரித்து ஓய்வூதியர் இயக்குநரகத்தை உருவாக்கினார்கள்.
Also Read : மருத்துவமனைகள் இருந்து என்ன பயன்? போதிய மருத்துவர்கள் இல்லையே..!
இந்த இயக்ககத்தின் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 88 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு முறைப்படி இயங்கி வந்தது. மறு சீரமைப்பு என்ற முன்மொழிவை ஏற்று பென்ஷன் இயக்குநரகம், அரசு தகவல் தொகுப்பு மையம், சிறுசேமிப்புத் துறை மூடப்பட்டது என்பதற்கு பதிலாக, கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டது என தற்போது ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் துறை மாவட்ட ஆட்சியாளர்களாலும், சென்னையில் மாநகராட்சி ஆணையராலும் நிர்வகிக்கப்படும். இதுகுறித்து வெளிவந்துள்ள அரசாணையின் எண் : G. O (ms)No.343 நாள்: 12. 11. 2024 Finance (Treasuries and Accounts-III Department).
புதிய ஓய்வூதிய திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் 2003 ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்பட்டு இன்றுவரையில் 6.14 லட்சம் பேர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலத்தில் விடிவு வரும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள். ஓய்வூதியர் இயக்குநரகமே கலைக்கப்பட்டதன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை நிதித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். இது முதலமைச்சருக்கு தெரியுமா?
முதலமைச்சர் நினைப்பதையெல்லாம் செய்து முடிக்கிற துணை முதலமைச்சருக்கு தெரியாமலா இந்த அரசாணை வெளிவந்துள்ளது? காரணம், இவர்களின் முழு நம்பிக்கைகுரியவர், அரசின் சாதனைகளின் அடையாள முகவரி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் தான் என்பது நாட்டுக்கும் தெரியும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நமது வேதனை உணர்வில் பங்கேற்பவராக இருப்பார் என்பதுடன், பிரச்சனைக்குத் தீர்வு காண்பவராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உணர்வில் பயணத்தினை தொடர்வோம்.
இனி பழைய ஓய்வூதியத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்குமா? என்ற ஐயம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் எண்ண அலைகளாக பீறிட்டு வெளிவருவதைக் காண முடிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியின் கருவூலத்திலும் சேதாரம் ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா? 50 தொகுதிகளை நிர்ணயிக்கின்ற வாக்கு வங்கியினை பாதுகாத்திட வேண்டுகிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்த CPS திட்டத்தில் அரசின் பங்குத் தொகை 14%, நியமனதாரரின் பங்களிப்பு 10% இரண்டையும் சேர்த்து ஓய்வு பெற்றால் ஒரு தொகையினை ஓய்வூதியமாக வழங்கி வருகிறார்கள். பணிக்காலத்தில் இறந்து போனால் ஒரு தொகையினை பணிக்கொடையாக வழங்கி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அரசின் பங்குத்தொகை 10% ஊழியர்களின் பங்குத்தொகை 10% என பணிக்காலத்தில் சேர்த்து வைத்த தொகையினை பணிநிறைவு பெறும்போது சிரமப்பட்டு பெறவேண்டியதாக உள்ளது .
மத்திய அரசு கொண்டுவந்துள்ள UPS திட்டம் அரசின் பங்குத் தொகை 18%, 25 ஆண்டுகளுக்குப் பிறகு 50% ஓய்வூதியம் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்தவரை CPS- ம் வேண்டாம், UPS- ம் வேண்டாம், OPS மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் நாளில் வாக்குவங்கியின் பலத்தினை அரசிற்கு உணர வைப்போம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry