தனியார்மயமாகிறதா போக்குவரத்துக்கழகம்..? மோடி அரசின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசு! மக்கள் விரோத முடிவுக்கு எதிர்ப்பு!

0
57
The CITU union has called for a crackdown on illegal minibuses operating in Chennai suburbs, raising concerns about passenger safety and the impact on government-run transport services.

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது சார்ந்து இருவேறு கருத்துகள் எப்போதுமே இருக்கிறது. குறிப்பாக, மினி பேருந்துகளை அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் வேலைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Also Read : கனிமவளக் கொள்ளை: தொடர்கதையாகும் கொலைகள்! பூவுலகின் நண்பர்கள் சரமாரிக் கேள்வி?

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை 2024 ஜூன் மாதம் 14 ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பேருந்து சேவை வழங்க அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அதிகபட்சமாக 25 கி.மீ. தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல்லாத வழித்தடங்களிலும், 8 கி.மீ., தொலைவுக்கு ஏற்கனவே சேவை உள்ள வழித்தடங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் வரைவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

2024-ம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க எதிர்ப்பும் கிளம்பியது.

விழாக்காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், “20 வருடங்களுக்கு முன்பாக கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தனியார் மினிபஸ் விடும் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கடைசி மைல் வரைக்குமான போக்குவரத்து தொடர்பை உறுதி செய்யவே மினிபஸ்களை அனுமதிக்கிறோம் என்றனர்.

அரசாங்கத்தாலேயே இதை செய்ய முடியும் என்றே அன்றும் சொன்னோம். இன்றும் சொல்கிறோம். அரசுப் பேருந்துகள் இயங்கும் வழித்தடத்தில் வெறும் 1 கி.மீ அளவுக்குதான் மினி பேருந்துகள் இயங்கும். மற்ற எல்லா வழித்தடங்களும் அரசு பேருந்துகளால் கவர் செய்யப்படாத இடங்களாகவே இருக்கும் என்றனர். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.

சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் செளந்திரராஜன்.

தனியார் பேருந்துகள் நிறைய தில்லு முல்லுகளை செய்தனர். தனியார் முதலாளிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கவில்லை. அதனால் பல இடங்களின் வாங்கிய பெர்மிட்களை மீண்டும் ஒப்படைத்துவிட்டனர். அப்போதே முறையாக செய்யப்படாத விஷயத்தை இப்போது மீண்டும் செய்கிறார்கள். இதை ஊர்ந்து ஊர்ந்து தனியார்மயத்தை நோக்கி முன்னேறும் முயற்சி என்று கூட சொல்லலாம்.

தனியார் முதலாளிகளின் அழுத்தத்தின் பேரிலேயே தமிழக அரசு இப்படியொரு முடிவை எடுக்கிறது. கடந்த ஆண்டு இதற்காக கருத்துக் கேட்புக் கூட்டங்களெல்லாம் நடந்திருந்தது. அதிலும் எங்களின் எதிர் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம். ஆனால், அதையெல்லாம் அவர்கள் கேட்கவே இல்லை. போக்குவரத்துத்துறை சார்ந்த பொருளாதார சிக்கல்களெல்லாம் அரசே உருவாக்கிக் கொண்டதுதான்.

குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களுக்கும் போக்குவரத்து சேவையை வழங்குவதும் அரசின் கடமைதான். நஷ்டம் வருகிற இடத்தில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள். நஷ்டம் வருகிற இடத்திலும் அரசுதான் மக்களுக்காக போக்குவரத்து சேவையை இயக்கியாக வேண்டும். நகர்ப்பகுதிகளில் மக்களின் அதிகப்படியான நெருக்கடிதானே பல சூழல் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

ஆக, மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி செல்ல வேண்டுமெனில் அதற்கான பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். அவர்களின் வசதிக்காக நஷ்டம் ஏற்பட்டாலும் அரசுதான் பேருந்துகளை இயக்க வேண்டும். உலகில் எங்குமே நகர்ப்புற பேருந்துகள் லாபத்தில் இயங்கவில்லை. ஆனாலும் பேருந்துகளை இயக்க வேண்டியது அரசின் சமூகக் கடமை.

அரசு நஷ்டத்தை சந்தித்தாலும் அதன் மூலம் சமூகம் பெறுகிற நன்மையைத்தான் பார்க்க வேண்டும். குழந்தைகள் பாஸ் மூலம் பயணம் செய்கிறார்கள். பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இதனால் ஒரு சமூகமாக நாம் நிறையவே உயர்கிறோம். மத்திய அரசு பின்பற்றிய தாராளமய தனியார்மய கொள்கைகளை மாநில அரசும் பின்பற்றுவது கடும் கண்டனத்துக்குரியது.

Also Read : சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டலாமா? மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என ஐபெட்டோ எச்சரிக்கை!

பிப்ரவரி முதல் வாரத்தில் மினி பேருந்து சேவைகள் தொடங்கும் என்கிறார்கள். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இவ்வளவு குறுகியகால இடைவெளியில் தடாலடியாக செய்வதே எதிர்ப்புக்குரல்களை அடக்குவதற்குதான். இந்த மக்கள் விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

தனியார் மினி பேருந்துகளை இயக்க யார், யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது? மினி பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன? அதற்கான பொது அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டனவா? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு விடைசொல்லித்தான் ஆக வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry