
3.15 Mins Read : புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜகபர் அலி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்துள்ளார். கனிமக் கொள்ளைக்கு எதிராக களத்தில் நின்று போராடியதால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதாக போகிறபோக்கில் குற்றம் சாட்டாமல், அதற்கான ஆதாரங்களை திரட்டி, உரிய அதிகாரிகளிடம் வழங்கி புகார் அளித்துவந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காத்திருந்தவரின் குரலையும், உயிரையும் கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றிக் நசுக்கியிருக்கிறார்கள்.

கொலைக்குப் பிறகு தானாக காவல்நிலையத்தில் சரணடைந்த லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்தப் படுகொலை தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்பட தலைவர்கள் பலர் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர்.
இதுபற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.இ.அ.தி.மு.க ஒன்றியக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கைத் திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் புகாரளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்” எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் ஜுனியர் விகடன் பேசியபோது, “சூழலியல் தொடர்பான சிக்கல்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மிரட்டப்படுவதும், வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாவதும், கொல்லபடுவதும் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தனி வழக்காக பார்க்கக் கூடாது, அப்படி பார்க்கவும் முடியாது. 2023-ம் ஆண்டு தூத்துக்குடி, கோவில்பத்து VAO லூர்து பிரான்சிஸ் மணல் மாஃபியா கும்பலால் அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இப்படிப் பலரும் தாக்குதலுக்கும், கொலைக்கும் உள்ளாகிறார்கள்.
அடிப்படையில், செயல்பாட்டாளர்கள் அனைவரும், மணல் அள்ளக் கூடாது என்றோ, கனிம வளங்களை எடுக்கக் கூடாது என்றோ போராடுவதைவிட, சட்டத்துக்குட்பட்டு, என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே கனிம வளங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றே போராடுகிறார்கள். சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என எழுகின்ற குரல் நசுக்கப்படுவதுதான் இங்குப் பெரும் பிரச்னை. இதுபோன்ற பிரச்னைகளின் வேரை மூன்று விதங்களில் அனுகினால் புரிந்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இயற்கைக் கனிம வளங்களை, இந்திய அரசின் கொள்கையானது ஒரு பண்டமாக, லாபமாகப் பார்க்கிறது. அதனால், இந்தியாவில் எங்கு கனிம வளங்கள் இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் அதை வெட்டி எடுத்துக்கொள்ளும் கொள்கையை வகுத்து, ஏலத்தில் விடுகிறது. அதன்மூலம் தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதித்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆர்ட்டிகிள் 39B, “இந்தியாவின் மெட்டிரியல் ரிசோர்ஸ் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும்” என்கிறது.
ஆனால், உச்ச நீதிமன்றம், ‘அரசு அதை தனியாரிடம் கொடுக்கும் வகையிலான கொள்கை முடிவெடுத்ததில் தவறில்லை’ என 2G வழக்கில் தெரிவித்து, மத்திய அரசின் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. எந்த வகையில் பார்த்தாலும் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்தான் முக்கியம். அதனால், அது அரசு அதிகாரிகளை தன் கைக்குள் கொண்டுவரத்தான் முயலும். அப்படி நடந்தால், கொள்ளைகள் தொடரும். அதை எதிர்த்து மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும். அப்படி எதிர்ப்பவர்கள்தான் பல்வேறு மிரட்டல்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!
அடுத்து மாநில அரசு… தமிழ்நாட்டில் மண் அள்ளுவதென்றால் அதை அரசுதான் செய்யமுடியும். ஏனென்றால் அது அரசுடமையாக்கப்பட்டுவிட்டது. மண் அள்ளுவதை அரசுடமையாக்கப்படும் அளவிற்குச் சட்டவிரோத நடவடிக்கைகள் அதில் இருந்தது. அப்படித்தன் இயற்கை வளங்களை எடுக்கும் அனைத்திலும் நடக்கிறது.
இதை முறைப்படுத்தும் விதமாகதான், தமிழ்நாடு அரசு ‘சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் விதி’ என்ற வரையரையை வைத்திருக்கிறது. அதற்கென தனித் துறையையே நாம் வைத்திருக்கிறோம். நம்மிடம் தான் சுற்றுச்சூழல்துறை, கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை, இயற்கை வளங்கள் துறை, வருவாய்த்துறை என இத்தனைத் துறைகள் வகைப்படுத்தி இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறோம்.
இந்தத் துறைகளுக்கென அமைச்சர்கள் இருக்கிறார்கள், பல்வேறு பிரிவுகளில் உயர் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இயற்கை வளங்களை, கனிம வளங்களைப் பாதுகாத்து, அதை சரியாக முறைப்படுத்த வேண்டும். ஆனால், இவர்களின் அந்தப் பணியின் தோல்வியால், பாதிக்கப்படும் பொதுமக்களிலிருந்து ஒருவர், இந்த முறைக்கேடுகளுக்கு எதிராகக் கேள்வி கேட்கவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதனால் ஏற்படும் பல இழப்புகளை அந்த சமூக ஆர்வலரும், இந்தச் சமூகமும் சந்திக்கிறது.
Also Read : ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக்கள் சொல்வது என்ன? மிக எளிமையான விளக்கம்!
ஜகபர் அலியின் குடும்பத்தாருக்கு ‘இது கொலையாக இருக்கலாம்’ என்ற சந்தேகம் வந்ததில்லையா… அப்படியானால், அந்தப் பகுதி காவல்துறைக்கு இது தொடர்பாக ஏற்கெனவே ஏதேனும் தகவல்கள் கிடைத்திருக்கும். இன்னும் தெளிவாக கூறினால், இதற்கு முன்பே ஜகபர் அலிக்கு கொலை மிரட்டல்கள் இருப்பது காவல்துறைக்குத் தெரியும்தானே… அவர்கள் அப்போதே முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். எனவே, ஜகபர் அலியின் கொலை அந்தப் பகுதி காவல்துறை அதிகாரத்தின் தோல்வியும் கூட.
லாபநோக்கத்துடன் அணுகப்படும் கனிம வளங்களை எடுக்கும் தனியார் நிறுவனங்கள், விதி மீறல்களில்தான் ஈடுபடும். அது நடக்காமல் இருக்க மாநில அரசும், நிர்வாக அதிகாரிகளும் முறையாகக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் அதில் தவறும் போது பொதுமக்களிடமிருந்து சிலர் கேள்வி எழுப்புவார்கள். அவர்களை லாபம் ஈட்ட முயல்பவர்கள் அடக்க முயற்சிக்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற மரணங்கள் நிகழ்கின்றன. சட்டம் உருவாக்கப்பட்டும், அதன் தோல்விகள்தான் இதுபோன்ற வன்முறைகளுக்கு முக்கியக் காரணம்” என்று கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry