கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் போஸ்டரோ அல்லது எந்தவித அடையாளமோ ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற போஸ்டர்கள், பாதிக்கப்பட்டோரை தீண்டத்தகாதவர்கள் போல பாவிக்க வகை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் அவர்களது வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் கவனக்குறைவாக தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கு சில மாநில அரசுகள் தாங்களாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன,’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கொரோனா நோயாளிகள் வீடுகளில் மாநில சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டுவது தேவையற்றது. ஒருவேளை கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குட்பட்டு உயரதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டும் நோட்டீஸ் ஒட்டலாம்” என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவதால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry