கச்சத்தீவை தாரைவார்க்க எதிர்த்தவர்! மதுரை எய்ம்ஸுக்கு அறிவிப்பை வெளியிட்டவர்! மாமனிதர் வாஜ்பாயை போற்றுவோம்!

0
43

இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பா...வின் அதீத வளர்ச்சியில் வாஜ்பாயை தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சுட்டிக்காட்ட முடியாது. காங்கிரஸ் அல்லாத தலைவராக 5 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பிரதமர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளில், நாட்டுக்காக அவர் எடுத்த முக்கிய முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், நடுத்தர பிராமண குடும்பத்தில் டிசம்பர் 25, 1924-ல் பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். எம்.. அரசியல் அறிவியல் படித்த அவர், 1942-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1951-ல் பாரதிய ஜன் சங்கத்தில் இணைந்த பிறகு,  ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஷ்யாமா பிரஸாத் முகர்ஜியால் ஈர்க்கப்பட்டார். 1957-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்புர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 1977-ல் மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். 1980-ல் தனது ஆர்.எஸ்.எஸ். சகாக்களான எல்.கே.அத்வானி, பைரோன் சிங் ஷெகாவத் உள்ளிட்டோரோடு சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்த வாஜ்பாய், அதன் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.

உள்கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம் என்பதை வாஜ்பாய் உணர்ந்தார். இதற்காக 1998-ல், நாட்டின் நெடுஞ்சாலைகளை இணைக்க அவர் திட்டமிட்டார். நாட்டின் தொழில் மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கும் வகையில் தங்கநாற்கர சாலை திட்டம் 2001-ல் வாஜ்பாயின் மூளையில் உதித்ததுதான். இதன் மூலம் நாட்டின் மெட்ரோ நகரங்கள் சாலை வழியாக இணைக்கப்பட்டன. அதாவது இமயம் முதல் குமரிவரை (டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை) இணைப்பை ஏற்படுத்தியது தங்க நாற்கரச் சாலை. கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த திட்டம்தான் Pradhan Mantri Grameen Sadak Yojana (PMGSY). நகர, மாநகர, கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றை இணைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என அவர் நம்பினார். இவரது திட்டம் வணிகம் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்திக் கொடுத்தது.

இந்தியாவும், அணுசக்தியும்

1998-ல் இரண்டாவது முறையாக பிரதமராக பொறப்பேற்றவுடன், அணுகுண்டு சோதனைக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். பொக்ரானில் 3 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. உலகின் அசைக்க முடியாத சூப்பர் பவர் நாடாக உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த அமெரிக்காவுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதன் மூலம் உலகநாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பினார் வாஜ்பாய்.

Pic Credit : GETTY

இந்தச் சோதனையை முன்னின்று நடத்தியது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான். ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆய்வு இன்ஸ்ட்டியூட் அறிவிப்புபடி, உலகிலேயே 9 நாடுகளிடம்தான் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா. பாதுகாப்பு துறையில் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற உதவியது வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் அணு ஆயுத சோதனைதான்

அனைவருக்கும் கல்வி

Sarva Shiksha Abhiyan எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை 2000-ம் ஆண்டு கொண்டுவந்தார்.  6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி வழங்குவதை உறுதிசெய்யவும், ஆண், பெண் பாகுபாடின்றி கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் இந்த இயக்கத்தை வாஜ்பாய் தொடங்கினார். இதன் மூலம் பள்ளி இடைநிற்றல் 60 சதவிகிதம் குறைந்தது. பெரிய வெற்றி பெற்ற இந்த இயக்கத்தின் நீட்சியாகத்தான் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

தொலைத்தொடர்பு புரட்சி

Picture Credit : GETTY

வாஜ்பாய் ஆட்சியின் போது, மாரச் 3, 1999-ல் புதிய தொலைத்தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தொலைத் தொடர்பு புரட்சிக்கு வித்திடப்பட்டது. ராஜீவ்காந்தி இறந்தபோது, நாட்டின் தொலைத் தொடர்பு வளர்ச்சி 0.6 சதவீதமாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 2.8 சதவீதமாக உயர்ந்தது. 1999ம் ஆண்டு 3 சதவீதமாக இருந்த தொலைத் தொடர்பு வளர்ச்சி, புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்குப் பிறகு 2012ம் ஆண்டுக்குள் 70 சதவீதமாக உயர்ந்தது.

வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம்

முதலீட்டை ஈர்ப்பதற்காக தனி ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தியவர் வாஜ்பாய். அவர் தனது ஆட்சிக்காலத்தில் பாரத் அலுமினியம் நிறுவனம், இந்துஸ்தான் சிங்க் நிறுவனம், இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன், விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட், மாருதி உத்யோக் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி, தனியார் முதலீடுகளை அனுமதித்தார். வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசு, சர்வதேச முதலீட்டாளர்கள், இந்திய சந்தையையும், அரசையும், நேர்மறை எண்ணத்தோடு பார்க்கவைத்தது.

வாஜ்பாய் பற்றிய எக்ஸ்பிரஸ் பார்வை

Picture Credit : GETTY

அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். வாஜ்பாய்க்கு, நரேந்திர மோடி அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பத்மவிபூஷண் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார். 50 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மக்களவைக்கு ஒன்பது முறையும், மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்த்தவர். 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அந்த ஊடுருவலை வாஜ்பாய் அரசு வெற்றிகரமாக முறியடித்தது. எனவே கார்கில் நாயகன் என அவர் போற்றப்படுகிறார்.

Picture Credit GETTY

பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த வாஜ்பாய் பல்வேறு நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1999-ல் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார். அப்போது லாகூர் உடன்படிக்கை கையெழுத்தானது. 1999 டிசம்பரில் இந்திய பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த விவகாரத்தை சாதுரியமாக கையாண்டு 176 பயணிகளையும் 15 விமான நிறுவன ஊழியர்களையும் வாஜ்பாய் பத்திரமாக மீட்டார்.

2001-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த விவகாரத்தையும் வாஜ்பாய் அரசு சர்வதேச அரங்கில் திறமையாகக் கையாண்டது. 2001-ல் நடைபெற்ற ஆக்ரா மாநாட்டில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன், வாஜ்பாய் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்த 2004ல் அறிவிக்கப்பட்டது. உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்டு திகழும் இந்தியாவில், அரசியல் பண்பாட்டுக்கும், நாகரிகத்துக்கும் பெருமை சேர்த்தவர் வாஜ்பாய். 2018 ஆக்ஸ்ட் 16-ல் உடல் நலக்குறைவால் வாஜ்பாய் காலமானார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry