வாழும் காமராஜர் தோழர் நல்லகண்ணு! பகட்டு அரசியல் தெரியாத பண்பான தலைவரை வணங்குவோம்!

0
396

சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமைத் தத்துவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான தோழர் நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள். விலை உயர்ந்த கார்களில் வந்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களை, எளிமையின் சிகரமான நல்லகண்ணு, சிறிய புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார். அவரிடம் கொடுக்க வேறு என்ன இருக்கிறது?

1925-ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், .வெ.ராவின் சுயமாரியாதை இயக்கமும் தோன்றின.அதே ஆண்டில், டிசம்பர் மாதம் 25-ம் தேதிதான் இந்தியாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 26ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் தோழர் நல்லகண்ணு.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இவருக்கு, பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 1943-ம் ஆண்டில், தனது 18-வது வயதில், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். இந்தியாவில் உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதேநேரம் பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் உணவுப்பொருள் பதுக்கப்பட்டிருப்பது தோழர் நல்லகண்ணுவின் கவனத்துக்கு வருகிறது. அந்த ஊருக்குள் ஆண்கள் பிரவேசிக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. இதைப் பயன்படுத்தி நெல் முட்டைகள் பதுக்கப்பட்டன. ஆர்.டி.ஓ-வுக்கு உடனடியாகக் கடிதம் எழுதி, அலுவலர்களை வரவழைத்து, அதிகாரிகள் துணையுடன், ஆயிரம் மூட்டைகள் நெல்லை நல்லகண்ணு வெளிக்கொண்டு வந்தார்.

1950-ம் ஆண்டு இந்தியா குடியரசானது. தான் விரும்பாத போராட்டக் குழுக்களை ஒடுக்க அன்றைய அரசு ஒரு முடிவெடுத்தது. நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நெல்லை சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு போடப்பட்டது. 1952-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உள்ளிட்ட பலருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. 27 வயதில் முதல் ஆயுள் தண்டனை. தோழர் நல்லகண்னுவின் வாழ்க்கை வரலாறு, ஆவணப்படமாக எடுக்கப்பட்டுவருகிறதுஇயக்குநர் சமுத்திரக்கனியின் தயாரிப்பில் எடுக்கப்பட்டுவரும் இந்த ஆவணப்படத்தை சேலம் சண்முகவேலு இயக்குகிறார்.

80 ஆண்டுகளாக, பொதுவுடைமைக் கொள்கைகளுடன் மக்கள் பிரச்சைனைகளுக்காக தோழர் நல்லகண்ணு போராடி வருகிறார்.  தாமிரபரணி நதியை மணல் மாஃபியாக்களிடமிருந்து பாதுகாத்தார்.  தொழிலாகிவிட்ட அரசியலில், இன்றுவரை எளிமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தோழர் நல்லகண்ணு, இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், கார், பங்களா, கல்லூரி என சம்பாதிக்கத் தெரியாத ஏமாளி.

புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு உண்டு. ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவரை  தொலைபேசியில் அழைத்து பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களை சந்திப்பார். மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும், நிதானமாக, மனம் நோகாமல், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை.

வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அவரது ஆதங்கம். நாத்திகவாதிதான்,  ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார். சென்னையிலும், சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திலும் சொந்தமாக வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகையில் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

ரஞ்சிதம் அம்மாள்நல்லக்கண்ணு திருமணம், கட்சி பார்த்து நடத்திவைத்தது. நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். எல்லோருக்கும் அவர்தோழர் நல்லகண்ணு’. தோழர்களுக்கு அவர் ‘ஆர்.என்.கே.’ 96-வது பிறந்தநாளில் வேல்ஸ் மீடியா, தோழர் ஆர்.என்.கேவை வணங்கி மகிழ்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry