தனக்கு தேவையானபோது மட்டும் ஆளுநரின் தடைகளை தகர்க்கும் முதல்வர்! கிரண்பேடியை வீழ்த்திய பட்டியலுடன் ஓர் அலசல்!

0
47

தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுநரை ஓரங்கட்டி, தான் நினைத்தை சாதித்து வருகிறார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், ஆளுநர் மீது பழிபோட்டது ஏன் என்ற கேள்விக்கு விடை தேடலாம்.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி, 2016, மே மாதம் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு ஜூன் மாதம் நாராயணசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அதுமுதலே, யாருக்கு அதிகாரம் என்பதில் இருவருக்கும் முட்டல் மோதல்தான். ஹெல்மெட் விவகாரத்தில், ஆளுநர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் கருப்பு உடை அணிந்து தர்ணாவில் ஈடுபடும் அளவுக்கு இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

ரேஷனில் அரசி வழங்குவதில், சூதாட்ட கிளப்புகளை அனுமதிப்பதில், அதிகாரிகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதிப்பதில் இருவரும் மோதிக்கொண்டனர். முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்று அரசு மீது கிரண்பேடி பகிரங்கமாக குற்றம்சுமத்தினார். ஆளுநரின் நெருக்கடியால் அரசு அதிகாரி மரணமடைந்ததார் என நாராயணசாமி புகார் கூறினார். அதுமட்டுமல்ல, கிரண்பேடியை, சர்வாதிகாரி, ஹிட்லரின் தங்கை என நாராயணசாமி விமர்சித்தார். இவர்கள் மோதலை பட்டியலிட மேண்டுமென்றால் நீண்டுகொண்டே போகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், வளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக் கட்டை போடுகிறார் என்பதுதான் நாராயணசாமி முன்வைக்கும் மய்யமான குற்றச்சாட்டு. எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பும்போது, நலத்திட்டங்களை செயல்படுத்த தான் தயார், கிரண்பேடிதான் செயல்படுத்த விடாமல் தடுக்கிறார் என நாராயணசாமி விளக்கம் அளிப்பார். ஆனால், கிரண்பேடியின் முட்டுக்கட்டையையும் மீறி முக்கியமான அல்லது தனக்குச் சாதகமான சிலவற்றை நாராயணசாமி நிறைவேற்றி காட்டியுள்ளார்.

கடந்த ஜுலை மாதம், ஆளுநர் உரையை கால தாமதமாக அனுப்பியதாக கூறி, பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற கிரண்பேடி வராத நிலையில், நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.  மதுபாட்டில்களில் போலி ஹாலோகிராம் ஒட்டி நிகழ்ந்த வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் கிரண்பேடி விசாரணைக்கு உத்தரவிட, எஸ்.எஸ்.பி ராகுல் அகர்வால் தலைமையிலான குழு முறைகேட்டை உறுதி செய்து, 100 கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தது. ஆனால்ராகுல் அகர்வால் விசாரணைக் குழுவை கலைத்து நாராயணசாமி உத்தரவிட்டார்

வாரியத் தலைவர் பதவியை நிரப்ப கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை என கட்சியினரிடம் கூறிய நாராயணசாமி, ஆட்சியை தக்க வைக்க சில எம்.எல்..க்களுக்கு மட்டும் வாரியத் தலைவர் பதவியை கொடுத்தார். ஹெல்மெட் கட்டாயம் என கிரண்பேடி உத்தரவிட, கட்டாயமில்லை என மாற்று உத்தரவு பிறப்பித்தார் நாராயணசாமி. கொரோனா விதிமீறலை கண்காணித்து, குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலித்தே ஆக வேண்டும் என ஆளுநர் கூற, அதையும் தடுத்து நிறுத்தினார் முதலமைச்சர்.

சில தினங்களுக்கு முன்பான திருநள்ளாறு விவகாரமும் இதில் அடங்கும். சனிபெயர்ச்சிக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என கிரண்பேடி உத்தரவிட, இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட வைத்த நாராயணசாமி, ஆளுநரின் கட்டுப்பாடுகளை உடைத்தார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கிரண்பேடி தடை போட, அதை நிராகரித்த நாராயணசாமி, கடற்கரை தொடங்கி அனைத்து இடங்களிலும் புத்தாண்டு கொண்டாடலாம், பொங்கல் கொண்டாடலாம் என்று அறிவித்தார்.

இதன் மூலம் ஆளுநர் தடுத்தாலும், முதலமைச்சர் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பது புலப்படுகிறது. ஆனால், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளார் என்று கூறியே, நான்கரை ஆண்டுகளை கடத்திவிட்டார் நாராயணசாமி. இவர்கள் இருவருக்கும் இடையேயான ஈகோவால் பாதிக்கப்பட்டது மக்கள்தான்.

முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்புவரை டெல்லி அரசியலில் ஈடுபட்டிருந்த நாராயணசாமிக்கு, உள்ளூர் அரசியலும், மக்களின் மனநிலையும் தெரியவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால், கூட்டணி கட்சியான திமுகவும் கடும் அதிருப்தியில் உள்ளது. இதனால்தான் நாராயணசாமி அழைப்புவிடுக்கும் போராட்டங்களையும், கூட்டங்களையும் திமுக நிராகரித்து வருகிறது. கூட்டணிக் கட்சிக்கே இவ்வளவு அதிருப்தி என்றால், மக்களுக்கு…?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry