புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து வரும் 8-ந் தேதியில் இருந்து, ராஜ்பவன் முன் தொடர் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு புதுச்சேரி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கிரண்பேடியை, மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன் தொடர் தர்ணா போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நாராயணசாமி தலைமையில் நடைபெறும் தர்ணாவில், திமுக தவிர்த்து, ஏனைய கூட்டணிக் கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில(மேற்கு) அதிமுக அமைப்பாளர் ‘ஓம் சக்தி’ சேகரிடம் வேல்ஸ் மீடியாக சார்பாக பேசியபோது, “அரசின் செயல்பாடு சரியில்லை என எதிர்க்கட்சிகள்தான் போராட்டம் நடத்துவார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் நாராயணசாமி, பதவியேற்றது முதல் போராட்டம், முற்றுகை என நடத்துகிறார். 20-25 போராட்டங்கள் நடத்தியுள்ள நாராயணசாமி, யாருக்கு கோரிக்கை வைத்து போராடுகிறார்?
அரசின் நிர்வாகம் சரியில்லை என்பதால்தான், ஆளுநர் அதை சரிசெய்து கொண்டிருக்கிறார். நாராயணசாமி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கையும், மாநில வளர்ச்சியையும் பாதுகாக்கிறார். இப்படியானதொரு சூழலில், சத்தியப்பிரமாணத்தை மீறி, மாநில முதலமைச்சரே, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாகவும், போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறுவது எந்தவகையில் நியாயம்?
Also Read : தனக்கு தேவையானபோது மட்டும் ஆளுநரின் தடைகளை தகர்க்கும் முதல்வர்! கிரண்பேடியை வீழ்த்திய பட்டியலுடன் ஓர் அலசல்!
கோவிட்-19 தொற்று காரணமாக, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை மீறி, கும்பல் கூட்டிக்கொண்டு போராட்டம் நடத்தப்போவதாக நாராயணசாமி அறிவித்திருப்பது, அரசின் சட்டத்தை அவரே மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதலமைச்சரே சட்டத்தை மீறினால், சாதாரண குடிமகன்கள் எவ்வாறு சட்டத்தை மதிப்பார்கள்? இது தவறான செயல்பாடாகும். இதைத் தடுத்து நிறுத்துமாறு தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அதை மீறி முதலமைச்சர் போராட்டம் நடத்தினால், எதிர்க்கட்சிகளும், மக்களும், ஒரே இடத்தில் பெருமளவு கூடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் அவர் வழிவகை செய்வதாகவே கருதப்படும்.
துணை நிலை ஆளுநர் செய்வது தவறு என்றால், நீதிமன்றத்தை நாடலாமே? அரசின் கோரிக்கை நியாயமாக இருந்தால், சாதகமாக தீர்ப்பு வருமே? ஜனநாயக ரீதியாக செயல்படாமல், முதலமைச்சர் சட்டத்தை கையிலெடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையாக நிர்வாகம் செய்ய முடியாவிட்டால், அரசை கலைத்துவிடலாமே? ஆட்சி முடியும் தருவாயில், தான் செய்வது அனைத்தும் சரி என்று மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க நாராயணசாமி முயற்சிக்கிறார். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கான தகுதியைக் கூட காங்கிரஸ் இழந்துவிட்டது என்பதே எங்களது கருத்து” என்று ‘ஓம் சக்தி’ சேகர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry