புதுச்சேரி அரசியலில் அதிரடித் திருப்பம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா? வேல்ஸ் மீடியா பிரத்யேகத் தகவல்!

0
23

புதுச்சேரி அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா  செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஆளுநர் – முதலமைச்சர் இடையேயான மோதலின் உச்சமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெறும் வரை, ராஜ்பவன் முன் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடப்போவதாக பாஜக பதிலுக்கு அறிவித்தது. இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், இரண்டு ஆளும் கட்சிகளுக்கு மத்தியில் காவல்துறை செய்வதறியாது கைபிசைந்து நிற்கிறது. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இது மறைமுக எமர்ஜென்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்தச் சூழலில், திடீரென 4 நாட்கள் மட்டுமே தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது. இது மக்களிடையே பலவிதமான விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, “துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நீடிக்க வேண்டும் என்பதையே முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஏனென்றால், அரசு நிர்வாகத்துக்கு கிரண்பேடி ஒத்துழைப்பு கொடுக்காததால், மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்ற வாதத்தை முன்வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தை கூர்மைபடுத்தும்போது, மத்திய அரசு அவருக்குத்தான் ஆதரவாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். கிரண்பேடிதான் துணைநிலை ஆளுநராக நீடிப்பார் என்பது மாநில ஆளும்கட்சிக்கு நன்றாக உணர்ந்துள்ளது. இதையே காரணமாகக் காட்டி, மாநில திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டதால்தான், எங்களால் எதையும் செய்யமுடியவில்லை என்று கூறி மக்களை சந்திக்க  நாராயணசாமி திட்டமிட்டுருக்கிறார்” என்று தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ், பாஜக பரஸ்பர போராட்ட அறிவிப்பு, திடீரென காங்கிரஸ் போராட்ட காலத்தை சுருக்கியது பற்றி, அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது, “ஆந்திர அரசியலுக்கு செல்வதாக கூறி மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தாலும், மத்திய அரசுக்கான சமிக்ஞையாகவே இதைப் பார்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக தற்போது நடக்கப்போவது, மாநில அரசியலில் அதிரடி திருப்பமாக இருக்கும்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசும், ஆளுநரும் ஒத்துழைக்கவில்லை எனவும், துணை நிலை ஆளுநரை மாற்றுமாறு தாங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என மக்கள் பேசுகின்றனர். அவ்வாறு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும்பட்சத்தில், அரசு பெரும்பான்மையை இழக்கும். ஆட்சி அமைக்க உரிமை கோரும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை, கூட்டணி அரசு அமைவதும் சாத்தியமில்லை.

எனவே, துணை நிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்புவார். பின்னர் ஆளுநர் ஆட்சி அமலாகும். ஆளுநர் ஆட்சி என்பதை சுருக்கமாகச் சொன்னால், தலைமைச் செயலாளரும், டிஜிபி-யும், துணை நிலை ஆளுநரின் உத்தரவுக்கு ஏற்ப பணியாற்றுவதாகும். இதன்படி பார்த்தால், வரும் சட்டசபைத் தேர்தல் ஆளுநர் ஆட்சியின் கீழ், அவரை மையப்படுத்தியதாகவே இருக்கும் எனத் தெரிகிறது” என்று தெரிவித்தனர்.

தற்போதைய சூழலில், புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப்போகிறார்களா? என்பது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இரண்டு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry