புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தி ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு முழுவீச்சில் அமல்படுத்தப்படுவதால், பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். அப்போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகவும், அரசு ஊழியர்களும், போலீஸாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் கிரண்பேடி உத்தரவிட்டார். இதுபற்றி புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்துத் துறைகளுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி “ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பது, பேருந்தின் படிகளில் பயணம் செய்வது, நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளில் கறுப்பு திரை ஒட்டுதல், விதிகளை மீறிய வாகன எண்களின் பலகை, முதலுதவிப் பெட்டியில்லாத வாகனம், வேகக் கட்டுப்பாடு கருவி மற்றும் தீயணைப்பான் இல்லாத பள்ளி வாகனம் உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ.200-லிருந்து ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினாலும், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தாலும் ரூ.1,000 அபராதத்துடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமையும் தடை செய்யப்படும். காரில் சீட் பெல்ட் அணியவில்லையென்றால் 1,000 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயும், வேக வரம்பை மீறினால் 1,000 முதல் 4,000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து புதுச்சேரியில், நேரு வீதி, செஞ்சி சாலை, கிழக்கு கடற்கரை சாலை என பல இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தோரிடம் போலீஸார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கத் தொடங்கினர். கார் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் வந்தாலும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நிகழ்விடத்திலேயே அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்யத் தொடங்கியதால், சில இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத ராஜ்நிவாஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கட்டாய ஹெல்மெட் சட்டம் முழுவீச்சில் அமல்படுத்தப்படுவதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தச் சட்டத்தை வீரியமாக அமல்படுத்தும் நேரம்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆயிரம் ரூபாய் அபராதம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தொகையாகும்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, எந்த மன நிலையில் அல்லது யார் தூண்டுதலில் இவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரியவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கால்பதிக்க பாஜக பல வழிககளிலும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், தன்னை ஆளுநராக நியமித்த பாஜக–வுக்கு தேர்தலில் ஆப்பு வைக்கும் விதகமாகவே கிரண்பேடி செயல்படுகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில், ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்பது, பாஜக–வுக்கு வாக்குகளை தேடித் தருமா? புதுச்சேரியில் பாஜக எந்த ரூபத்திலும் வளர்ந்துவிடக்கூடாது என்பதாகவே அவது செயல்பாடு இருக்கிறது.
இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடி ஆளுநராக இருக்கும்வரை, காங்கிரஸ் கட்சி தேர்தல் வெற்றியைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறிவருகிறார். கிரண்பேடியின் செயல்பாடு பாஜக–வுக்கு எதிராக இருக்கிறது என்பதை இதைவிட எப்படிக் கூறமுடியும்?” என்றார்.
2019-ம் ஆண்டு, கிரண் பேடி கொடுத்த அழுத்தத்தால் அப்போது டி.ஜி.பி–யாக இருந்த சுந்தரிநந்தா, `ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்’ என்று கண்டிப்புடன் கூறினார். ஆனால் `அபராதம் வசூலிக்கக் கூடாது, அறிவுரை மட்டுமே வழங்க வேண்டும்’ என்று முதல்வர் நாராயணசாமி கூறியதால் ஹெல்மெட் பிரச்னை முடிவுக்கு வந்தது.
கொரோனா ஊரடங்கு தளர்வின்போது, மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க கிரண்பேடி உத்தரவிட்டிருந்தார். இதனால் கடும் அதிருப்தி கிளம்பியவுடன், முதலமைச்சர் நாராயணசாமி அபராதம் வசூலிப்பதை நிறுத்தச் சொன்னார். இந்நிலையில், ஹெல்மெட் விவகாரம் மீண்டும் தீவிரமெடுத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் நாராயணசாமியும் மவுனம் காத்து வருகிறார். வாகன ஓட்டிகளின் அதிருப்தி பாஜக பக்கம்தானே திரும்பும் என்ற ரீதியில், தனது அரசியல் நலனுக்காக அவர் மவுனமாக இருக்கிறாரா? அல்லது மக்கள் அதிருப்தியை போக்கும் வகையில், அபாரதம் வசூலிப்பதை முறைப்படுத்துவரா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry