அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பெருந்தலைவர் காமராஜர் கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், முறையான விதிகள் பின்பற்றாததால் 5 ஆண்டு காலத்துக்கு கல்லூரியின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்து கடந்த ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து பொது இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணத்தை திரும்ப தர வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், முறையான விதிகளை பின்பற்றாமல் கல்லூரி நடத்தி மாணவர்களிடம் கல்வி கட்டணமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, அறக்கட்டளைக்கு எதிராக, ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முறையான விதிகளை பின்பற்றாமல் மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்த அறக்கட்டளை உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, மணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணத்தில் 50 சதவீத தொகையை பெற்று தர வேண்டும். இந்த கல்லூரியில் படித்ததால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மாணவர் கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry