விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் சர்மா–வை இகழந்தும், கருணாநிதியே ஆகச் சிறந்த சாதி ஒழிப்புப் போராளி போலவும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் பேசிய திருமாவளவன், திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஒரு அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக வள்ளுவருக்கு பூணூல் அணிவித்தார். அதை பார்த்த கருணாநிதி, ‘திருவள்ளுவரை, ஒரு ஜாதிக்குள் அடைக்கக் கூடாது; அவர் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் உடலில் உள்ள பூணூலை கழற்றி எறியுங்கள் எனச் சொல்லி, பூணூலை அறுத்து எரிந்தார்‘ என்று கூறியுள்ளார்.
இதுபற்றி வேணுகோபால் சர்மாவின் மகன் விநாயக் வே ஸ்ரீராமிடம் கேட்டோம்.’அப்பா, ஒரே நாளில் வள்ளுவர் படத்தை வரைந்து விடவில்லை. 12 ஆண்டுகள் தீவிர முயற்சி எடுத்து, வரைந்து வரைந்து மேம்படுத்திதான், தற்போது நாமெல்லாம் பார்த்து போற்றும் வள்ளுவர் உருவத்தைக் கொண்டு வந்தார். 2,000 ஆண்டுகளாக வள்ளுவருக்கு இல்லாதிருந்த உருவம் கிடைத்ததும், முதல் ஆளாக அதை பார்த்து, வியந்து அப்பாவை பாராட்டினார் பாரதிதாசன்.
வள்ளுவர் கழுத்தில் கிடந்த பருத்தி நூலால் வேயப்பட்ட சரடை பாரதிதாசன் பார்த்தார். ‘வள்ளுவனே ஒரு இலக்கணம்; அவனுக்கு எதுக்கு புது இலக்கணம். அந்த நூல் சரடை அகற்றி விடுங்கள்‘ என, அப்பாவிடம் சொன்னார்.கூடவே, பிற்காலத்தில் வள்ளுவனை, ஒரு ஜாதிய அடையாளத்துக்குள் அடைத்து விமர்சிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கையாக சொன்னார்.
என்ன ஒரு தீர்க்கதரிசி பாருங்கள். ஆனால், பாரதிதாசன் சொன்னதை அப்பா ஏற்கவில்லை. சரியென, பாரதிதாசன் சென்று விட்டார். பின்னர் பாரதிதாசன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘ஓவியரான உங்களுக்கு, ஓவியம் தான் தெரியும்; சமூகம் தெரியாது. அதனால், என் வேண்டுகோளாக ஏற்று, திருவள்ளுவர் கழுத்தில் இருக்கும் பருத்தி நூல் சரடை மட்டும் நீக்கி விடவும்‘ என, அதில் எழுதி இருந்தார்.
ஒரு மாபெரும் கவிஞன், உணர்ந்து சொல்லும் விஷயத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் கழுத்தில் இருந்த பருத்தி நூல் சரடை, அப்பா நீக்கினார். இது நடந்தது, 1959ல். பிறகு தான், அண்ணாதுரை, காமராஜர், கக்கன், ஜீவா, கண்ணதாசன் ஆகியோர் திருவள்ளுவர் படத்தை பார்த்து, அப்பாவை பாராட்டினர். அதற்கான ஒலி நாடா எல்லாம் என்னிடம் இருக்கிறது. பின், 1964ல் முதல்வராக இருந்த பக்தவத்சலம், அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை சட்டசபையில் திறந்து வைத்தார். அதன்பின், 1967ல், முதல்வரான அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை வைக்க அரசாணை வெளியிட்டார்.
வள்ளுவர், 1,330 குறள்களில் உலகையும், மனிதர்களையும் குறித்து சொன்ன விஷயங்களில் இருந்து தான், வள்ளுவர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற வடிவமே அப்பாவுக்கு உருவானது. அதன்படி தான் ஜடாமுடி, தாடி, நீள நெற்றி, அமர்ந்திருக்கும் நிலை என்பதையெல்லாம் ஓவியத்தில் கொண்டு வந்தார் அப்பா. பூணூல் என்பது கழுத்தில் அணிவது அல்ல. உடலின் குறுக்கே அணிவார்கள்.
உண்மை இப்படி இருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இந்த விஷயத்தில் இழுத்து வந்து திருமாவளவன் ஏன் பேசுகிறார் என தெரியவில்லை. இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னபோது, அவருக்கு நான் இந்த விபரத்தை சொன்னேன். அவர் உடனே புரிந்து கொண்டு, வருத்தம் தெரிவித்தார்’ என்று சொன்னார் ஓவியர் சர்மாவின் மகன்.
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர், சாமி தியாகராஜன் கூறும்போது, “பக்தவத்சலம் காலத்தில், வள்ளுவர் படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. பின், 1966ல் மயிலாப்பூர் சிவசாமி சாலையில், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அந்த சிலை, வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த சிலையில், பூணூல் இல்லை. எனவே, வள்ளுவருக்கும், பூணூலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவளவன் முழுமையான வரலாறு தெரிந்து கொண்டு பேசினால் நல்லது” என்று அவர் கூறினார்.
With inputs from Dinamalar
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry