தடுப்பூசிக்கும் அடங்காத டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்! தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்றியிருப்பதாக அறிவிப்பு!

0
22

மராட்டியம், கேரளாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட்19 வைரஸ், டெல்டா வைரஸ் மரபணுவாக மாறி, பின் டெல்டா பிளஸ் என்ற வைரஸாக உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸானது, தென் ஆப்ரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸின் மரபணுக்களையும் உள்ளடக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொற்றை தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது எனவும், நோய் எதிர்ப்பு திறனை இது முழுவதுமாக அழித்துவிடும் எனவும், நோய் தொற்று ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வைரஸை, அச்சுறுத்தலுக்கு உரியது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது.

ஒருவேளை கோவிட் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால், டெல்டா பிளஸ் வைரசால் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில், 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கூடுதல் பாதிப்புகளை மீண்டும் சந்திக்க நேரிடும். இது மிக எளிதாகப் பரவக்கூடியது. மாஸ்க் அணியாமல், பாதிப்பு உள்ளவர்களை கடந்து சென்றாலே டெல்டா பிளஸ் தொற்றிவிடும்என, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.

டெல்டா பிளஸ் கொரோனாவால், இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ் 3-வது அலையை ஏற்படுத்தலாம் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

ஆல்ஃபா வேரியன்ட்டை விட டெல்டா பிளஸ் 35-60% அதிக தொற்று ஏற்படுத்தக் கூடும் என்றும், வேகமாக பரவக் கூடியது எனவும் கூறப்படுகிறது. டெல்டா வகையால்தான் 2-வது அலை ஏற்பட்டது. அந்த வகை வைரஸ், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை அதிகரித்தது. ஆனால் டெல்டா பிளஸ் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும், அதன் அறிகுறி எப்படி இருக்கும்? என்பது பற்றிய தகவல் இல்லை.

இந்நிலையில், தமிழகத்திலும், முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில், தற்போது டெல்டா பிளஸ் பரவல் ஆரம்பித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், போலாந்து, நேபாளம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மருத்துவ உலகை மேலும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry