சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், ‘ஜெய்ஹிந்த்‘ தொடர்பாக பேசிய பேச்சு, பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வரும் காலத்தில் தேசிய கீதமும் தவிர்க்கப்படுமா? என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
இந்த சர்ச்சைக்குப் போவதற்கு முன், தியாக செண்பகராமன் பற்றி சுருக்கமாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ரஷ்யத் தலைவரான லெனின் மற்றும் ஜெர்மானிய தலைவர்களுடன் பழகியவர். ஹிட்லருடன் இவர் நெருங்கிப் பழகிவந்த காலத்தில், பேச்சு வாக்கில் ஹிட்லர், இந்தியர்களை பற்றி இழிவாக பேசி விட்டார். அதற்காக அவர் செண்பகராமனிடத்தில் மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட வீரம் செறிந்த செண்பகராமன், ஜெர்மனியில் இருந்து சென்னை கோட்டை வரை, ‘எம்டன்‘ கப்பலில் வந்து, குண்டு போட்ட வீரத்துக்கு சொந்தக்காரர்.
‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கம் தியாகி செண்பகராமன் உருவாக்கியது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் செண்பகராமன் பேசும் போது உருவான சொல்தான் இது. ‘இந்தியாவுக்கு வெற்றி‘ என்ற, உயரிய சிந்தனையின் வெளிப்பாடு அது. இப்படிப்பட்ட வீரம் செறிந்த செண்பகராமனுக்கு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 2008-ம் ஆண்டு சிலை நிறுவியர் கருணாநிதி. ஆனால், அவர் வழி நடக்கும் தற்போதைய ஆட்சியில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் தவிர்க்கப்படுவது, தியாகி செண்பகராமனை அவமதிப்பதற்கு ஒப்பனாது, தேசபக்தியை கேள்விக்குறியாக்குவது.
செண்பகராமன் உருவாக்கிய ஜெய்ஹிந்த் முழக்கம் பற்றி சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், சென்ற ஆளுநர் உரையின் கடைசையில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என இருந்த து. இந்த ஆளுநர் உரையிலேயே ஜெய்ஹிந்த் இல்லை. தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என பேசியிருக்கிறார். இதை அவைத்தலைவரோ, முதலமைச்சரோ கண்டிக்கவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையானவுடன், திமுக ஆட்சி இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறது. ஜெய்ஹிந்த் என்பது இந்தி சொல். அதனால்தான் ஆளுநர் உரையில் அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. அதைக்குறிப்பிட்டே அவ்வாறு பேசினேன் என்கிறார் ஈஸ்வரன். அப்படியானால்,
‘சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா’
எனத் தொடங்கும் தேசிய கீதமானது வங்க மொழியில் உள்ளது, எனவே அதை தவிர்க்க வேண்டும் என்று ஈஸ்வரன் சொல்வரா?, அல்லது எம்.எல்.ஏ. வாக அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை தவிர்ப்பாரா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இதுதொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், “ஈஸ்வரன் அவர்கள் டாக்டர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். திமுகவை திருப்திப்படுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரன் இப்படி பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன்! இப்படியான பேச்சுக்கள், காக்காய் பிடிக்கும் பேச்சுக்கள்! அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பேசக்கூடிய பேச்சுக்கள்! சந்தர்ப்பவாத பேச்சுக்கள்! என்றுதான் நான் கருதுகின்றேன்.
இருந்தபோதிலும் செண்பகராமன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட ஜெய்ஹிந்த் முழக்கம் நேதாஜியால், முத்துராமலிங்கத் தேவரால், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசபக்தர்களாலும் உச்சரிக்கப்பட்ட எழுச்சிமிகு கோஷம்! ஈஸ்வரன் அவர்களே, இந்த வரலாறு உங்களுக்குத் தெரியும், இருந்தாலும் திமுக சகவாசம் உங்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. ஈஸ்வரனின் பேச்சு கண்டிக்கத்தக்கது.
ஜெய்ஹிந்த் முழக்கம் கவர்னர் உரையில் இடம்பெறாதது ஒரு தற்செயல் நிகழ்வுதான் நாம் கருதி கொண்டிருந்தோம். ஆனால் இதன் பின்னாலும் இந்து விரோத, இந்திய விரோத, பிரிவினைவாத சிந்தனை உள்ளது என்பது கொங்குநாடு ஈஸ்வரன் பேச்சின் மூலம் தெளிவாகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதனைத் தெளிவு படுத்த வேண்டும். இதுகுறித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry