மக்கள் படும் இன்னலைப் பார்க்க எமது தொகுதிக்கு வாருங்கள்! சட்டமன்றத்தில், முதலியார்பேட்டை திமுக எம்.எல்.ஏ. சம்பத் உருக்கம்!

0
31

திருக்குறளை மேற்கோள்காட்டி, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து, சட்டமன்றத்தில் தனது முதல் உரையை பதிவு செய்த முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.. சம்பத், மக்கள் படும் இன்னைலைப் பார்க்க தனது தொகுதிக்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

மற்ற மாநிலங்களுக்கு புதுச்சேரி முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கையுடன் பேச்சை தொடங்குவதாக குறிப்பிட்ட சம்பத், கல்வி கேந்திரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறி வருகின்றனர் என்றார். மேலும் பேசிய அவர், “2020ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 188 பேர் வேலைவாய்ப்பு பெற்றதாக இந்த அவையில் துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டார். அதாவது சராசரியாக ஒரு சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கின்றது .

இங்கு படிப்புக்கேற்ற வேலை இல்லை என்ற காரணத்தால், பட்டம் பெற்ற மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் அவர்களது பெற்றோர் தவிப்புக்கு ஆளாகின்றனர். சராசரியாக படித்தவர்களுக்கும் இங்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு சுய தொழில் செய்யும் வாய்ப்பும் இல்லை. இதனால்அவர்கள்தவறானபாதைக்குசெல்கின்றனர்

அரசு நிர்வாகம் இனிமேலும் வேலைவாய்ப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு நம் மாநில இளைஞர்களின் ஆற்றல், அறிவு, உழைப்பு ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு தாரைவார்த்துவிட்டு, ஒவ்வொரு இல்லங்களிலும் அறிவிக்கப்படாத அனாதை இல்லங்களாக மாறுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

முதலியார்பேட்டை தொகுதியிலுள்ள இருபெரும் தொழிற்சாலைகள் தான் மூடப்பட்டுள்ளன என்றால், உழந்தை ஏரி மற்றும் முருங்கப்பாக்கம் ஏரியின் நிலையும் கவலை அளிப்பதாக உள்ளது. அவை இரண்டும் விரைவில் மனைப்பிரிவுகளாக்கி விற்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் எழுகிறது. அந்த 2 ஏரிகளும் தொடர்ந்து ஒரு சாராருக்கு மீன்பிடி குத்தகைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஏரியிலிருக்கும் தண்ணீரை வெளியேற்றி அவர்கள் மீன்பிடிப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

நிலத்தடிநீர் வளத்தை மேம்படுத்த பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்காமல் கடலில் கலக்க விட்டு, அது உப்பு நீரான பிறகு, மக்களின் குடிநீர் தேவைக்காக பல கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த அரசு ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றது. உழந்தை மற்றும் முருங்கம்பாக்கம் ஏரிகளில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்யுமாறு முறையிட்டால், வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடும் என புதுச்சேரி நகராட்சி கூறுகிறது.

அப்படியானால், ஊசுடு மற்றும் கணக்கன் ஏரிகளை, ஏன் மீன்பிடிக்க குத்தகைக்கு கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆனால், முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள உழந்தை மற்றும் முருங்கம்பாக்கம் ஏரிககள், தனி மனிதருக்காக, அதுவும் அரியாங்குப்பம் தொகுதியை சார்ந்த ஒருவருக்காக, யாருடைய பின்புலத்திலோ, யாரோ ஒருவர் சொத்து சேர்ப்பதற்காக, இயற்கை வளம் கொள்ளைபோவதை இந்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். உழந்தை மற்றும் முருங்கம்பாக்கம் ஏரிகளை சுற்றுலாத்தலங்களாக மாற்றினால், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாவதுடன், மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியும் மேன்படுவதோடு, முதலியார்பேட்டை தொகுதியும் வளர்ச்சி அடையும்.

நிதிநிலை அறிக்கையில் முதலியார்பேட்டை தொகுதிக்காக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. எனது தொகுதியின் உண்மை நிலையை கண்டறிய, மாண்புமிகு பேரவைத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சரும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், தயவு கூர்ந்து முதலியார்பேட்டை தொகுதியை நேரில் வந்து ஆய்வு செய்ய கோருகிறேன். கல்மனத்தையும் உருக்கும் காட்சிகள் உங்களுக்கு காத்திருக்கும்.

பாரதி மில் பகுதியில் 75 ஆண்டுகளாக  ஒரே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும். ஜோதி நகர், துலுக்கானத்தம்மன் நகர் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வேல்ராம்பட்டு பகுதியில், வாய்க்கால் தெரு என்ற இடத்தில் சுமார் 75 குடும்பங்கள் வாய்க்கால் மீது குடிசை அமைத்து சாக்கடையின் நாற்றத்திலும் கொசுக்கடியிலும் நரகவாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும்.

நேரு நகர், சப்தகிரி நகர், பாரதியார் நகர், அழகாபுரி நகர் ஆகிய பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மழை வெயில் என்று பாராமல் மின்துறை ஊழியர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், பராமரிப்பிற்கு எந்த உபகரணங்களும் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கும் சாலைகளை இரவில் கடக்க பெண்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையை சரிசெய்ய வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்தும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருப்பதால், மாநிலத்துக்கு அதிக நிதி பெற்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்க தேவையான நடவடிக்கையை எடுத்து, புதுவை இளைஞர்கள், புதுவையிலேயே பணிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 2 பஞ்சாலைகளை புனரமைத்து, பழைய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகையை வழங்கிவிட்டு, அங்கே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

தனியார் மற்றும் அரசு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பஞ்சாலைகள் நவீனப்படுத்த தேவையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும் என நம்புகிறேன். கட்சிப் பாகுபாடு இன்றி முதலியார்பேட்டை தொகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு கோருகிரேன்என்று சம்பத் தமது கன்னிப்பேச்சில் குறிப்பிட்டார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry