சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட, அதிக மழை பதிவாகி வருகிறது. அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்கிறது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதன்காரணமாக சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதி கனமழை காரணமாக சென்னையில் தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 23 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழவரத்தில் 22 செ.மீட்டரும், எண்ணூரில் 20 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் தலா 18 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதிகள் மட்டுமின்றி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வட சென்னை – தெற்கு ஆந்திரா இடையே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால், சென்னை முழுவதும் பலத்த காற்று வீசுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே சென்னைக்கு இருந்த ஆபத்து நீங்கி, அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானியல் மாற்றங்களை கணித்து வரும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சென்னைக்கு இருந்த மோசமான சூழல் முடிந்தது. இனி எப்போதாவது மழை பெய்யும். இன்று மாலை வடசென்னைக்கும்– ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை காற்று வீசும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 200 மி.மீ.ருக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று நீண்ட பிரேக் எடுத்து மழை விட்டு விட்டு பெய்யும். அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை,’ என தெரிவித்துள்ளார்.
Worst is over and occasional rains will happen. It will be windy till Depression crosses North Chennai-Sriharikota belt by evening. On average 150 mm rainfall reported in Chennai and KTC belt and some stations 200 mm too.
Rainfall recorded lake inflows – https://t.co/WoUHUGXbJs pic.twitter.com/LQek7wtBd9
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 11, 2021
Last band of clouds giving heavy farewell rains from the Depression. Should last for another hour or so.
Meanwhile the lakes inflows and outflows are managed with cushion to the flood. pic.twitter.com/Hc5K9Y6fBD— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 11, 2021
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மாற்றமும், சில இடங்களில் போக்குவரத்துக்கு தடையும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மற்றொரு வழித்தடமான சென்னை – கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை வழக்கம்போல நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று மாலை அவர் கடலூர் செல்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry