குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து! தலைமை தளபதி பிபின் ராவத் நிலை என்ன? மத்திய அரசு அவசர ஆலோசனை!

0
120

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்ததை விமானப்படை உறுதி செய்துள்ளது. விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ – 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உள்பட 14 உயர் அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது. இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் காட்டேரி மலைப்பாதையில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மூவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதால் பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. பிபின் ராவத் மனைவியும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்புத்துத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியை அவசரமாக சந்தித்து விபத்து குறித்து விவரித்துள்ளார். ராஜ்நாத் சிங், நீலகிரிக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘‘தமிழகத்தின் குன்னூர் அருகே சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஐஏஎப் எம்-17வி5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

Mi-17V-5 Military Transport Helicopter

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டரில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்தது எப்படி? யார் யார் பயணித்தனர்? விபத்துக்கு பின் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

ராணுவ போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்கமுடியும். மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது இந்த ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரின் எரிபொருள் கொள்ளளவும் அதிகம்.

ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழ்ந்திருந்தால், எரிபொருள் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என்றும், இதனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்திருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார். மீட்பு பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். மேலும், இன்று மாலை முதலமைச்சர் குன்னூர் செல்ல உள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*