குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து! முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! மத்திய அரசு அவசர ஆலோசனை!

0
85

குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ – 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உள்பட 14 உயர் அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டரானது மதியம் 12.20 மணிக்கு, வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் காட்டேரி மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீப்பிடித்தபடி கீழே விழுந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றது. விபத்தில் சிக்கிய 14 பேரில் , பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் மரணமடைந்ததாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

கேப்டன் விக்ரம் சிங் மட்டும் 80 சதவிகித தீக்காயங்களுடன் வெலிங்கடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீயில் மிக மோசமாக கருகி இருப்பதால், உயிரிழந்த 13 வீரர்களின் உடல்களை டி.என்.ஏ. சோதனை மூலமே அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 டிசம்பர், 2016 அன்று ராணுவ தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற மூன்றாவது அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார். அதோடு, 2017-ம் ஆண்டிலிருந்து நேபாள் ராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வந்தார். பின்னர் இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று காங்கோ குடியரசில் நடைபெற்ற ஆபரேஷன்களை (MONUSCO) நடத்தினார். அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்.

பிபின் ராவத்தின் 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry