திரைப்படங்களை அதன் தன்மையறிந்து தனக்கே உரிய பாணியில் வறுத்தெடுக்கும் ப்ளு சட்டை மாறன் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்.’ படத்தின் தலைப்பே சர்ச்சயை ஏற்படுத்துவதைப் போல இருந்தாலும், கதைக்களமும் அது பேசிய வெளிப்படையான அரசியலும் நேர்மையானது, எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாதது.
கடலோர நிலப்பரப்பு மட்டுமே சாதி, மதங்களை கடந்து அனைத்துத் தரப்பு ‘எளிய’ மக்களையும் உள்ளடக்கியது. இதனையே ஆதம் பவா தயாரிப்பில், ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் கதைக்களமாக மாறன் எடுத்திருப்பது, அவருக்கும் அவர் பேச நினைத்த அரசியலுக்கும் கிடைத்த முதல் வெற்றி.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட இப்ராஹிம்-சரோஜா தம்பதியினரின் மகன் பாட்ஷா கொலை செய்யப்படுகிறார். தந்தை இப்ராஹிம் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், பாட்ஷாவின் உடலை அடக்கம் செய்ய முடியாது என முஸ்லிம் ஜமாத்தார்கள் மறுக்கிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைக்கிறது இந்து அடிப்படைவாத பின்னணிக்கொண்ட கட்சி.
அங்கும் சில பிரச்சினைகள் எழ, பாட்ஷாவின் தாய் சரோஜா லூர்துமேரியாக மதம் மாறிவிட்டதாகக் கூறி, பாட்ஷாவின் உடலுக்கு சொந்தம் கொண்டாடுகிறது கிறிஸ்துவ அமைப்பு. இன்னொரு பக்கம் மயிலாப்பூர் தொகுதி இடைத்தேர்தலில், தோல்வியில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியும் பாட்ஷாவின் மரணத்தை வைத்து பிண அரசியல் செய்கின்றது. இறுதியில் மத அடிப்படைவாதங்களுக்குள் சிக்கிக்கொண்ட பாட்ஷாவின் சடலமும், அதனை சுற்றி நிகழும் பிண அரசியலும் என்ன ஆனது என்பது தான் ‘ஆன்டி இண்டியன்’.
படத்தின் தலைப்பைப் போலவே கதைக்களமும் பல சர்ச்சைகளை எழுப்பும் வாய்ப்புள்ளவை தான். ஆனால், அவை எதற்கும் இடம்கொடுக்காமல், பிரசாரத்தன்மையும் இல்லாமல் நேர்த்தியாக தமிழில் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன். எளிய மக்களின் வாழ்வியலில் இருந்தே இந்த அரசியலைப் பேசியது கதைக்குள் சரியாகப் பொருந்திப் போகிறது.
மதங்களை அவரவர் வாழ்வியல் நெறியாக மட்டும் பார்த்தாலே போதும், அதன் எல்லைக் கோடுகளைத் தாண்டி சிலரிடம் மட்டுமே காணப்படும் அடிப்படைவாதம், சமூகத்தை, கிழிந்த கந்தல் துணியாக மாற்றிவிடும் என பிணத்தை வைத்து அரசியல் பேசியிருக்கிறார் மாறன். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மும்மதங்களையும், அவைகளை புனிதப்படுத்துவதற்காக என கூறிக்கொள்ளும் இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும் மேற்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியலை வெளிப்படையாகவே வெளுத்து வாங்கியிருக்கிறது ‘ஆன்டி இண்டியன்.’ அதே அளவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தையும், தேர்தல் அரசியலையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படம்.
ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜய் டிவி பாலா இவர்களுடன் இன்னும் ஓரிரண்டு பாத்திரங்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் அறியப்படாத முகங்கள் தான். இவர்களும் பாட்ஷா பாத்திரத்தில் சடலமாக வரும் ப்ளு சட்டை மாறன், கறுஞ்சட்டையுடன் வலம்வரும் மறைந்த மாறனின் பாத்திரம், கானா பாடும் இளைஞர்கள் என அனைவரும் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
‘ஆன்டி இண்டியன்’ கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு புதுமைகள் இல்லாமல் போனாலும், அடிப்படைவாத அரசியல் பின்னணியில் சமகால சிக்கல்களை எளிமையாக புரிய வைக்கிறது. வரும் 10-ந் தேதி இந்தப்பட் தியேட்டர்களில் ரிலீசாகிறது. பலப்பல படங்களை விமர்சன ரீதியாக கிழித்துத் தொங்கவிட்ட புளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விமர்சனம் – களந்தை அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர்.
தொடர்புக்கு :- kalandhai.abdulrahman@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*