ரஜினி – சசிகலா சந்திப்பின் பின்னணி! 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஆலோசனை! பாஜக-வை சமாதானப்படுத்த முயற்சி!

0
52

வி.கே. சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்திப்புக்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று அதிமுக தலைவர்கள் விவாதித்து வரும் நிலையில், நமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டுள்ள சசிகலா, பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே அறிக்கைகளையும் வெளியிடுகிறார். ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும்‌, விருப்பு வெறுப்புகளுக்காகவும்‌ செயல்பட்டுக் கொண்டிருக்‌கின்ற நம்‌ இயக்கத்தைச் சரிசெய்து, மீண்டும்‌ அதைத் தொண்டர்களுக்கான ஓர் இயக்கமாக மாற்றுவோம் என்று ஒரு அறிக்கையில் சசிகலா கூறியிருந்தார்.

என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது என மற்ரொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா நினைவு தினத்தன்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஆதரவாளர்களுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்ட சசிகலா, வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுவோம்கரம் கோர்ப்போம் என்று தெரிவித்தார்.

இதன்மூலம், தன்னை பொதுச்செயலாளராக நிலைநிறுத்திக்கொள்வதில் உறுதி காட்டும் சசிகலா, ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் அவ்வப்போது உணர்த்திவருகிறார்.  ஆனால், “இனி இரட்டைத் தலைமைதான் என்பதை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதற்காகக் கட்சியின் விதிகளில் சில திருத்தமும் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. .தி.மு.வைப் பொறுத்தவரையில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதியாக கூறிவருகிறார்கள்.

இந்நிலையில்தான் தமிழக அரசியலை ஒருசேர பரபரப்பாக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்கே சென்று சசிகலா சந்தித்துள்ளார். திங்கள் கிழமை மாலை நடந்த மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின்போது, ரஜினியின் உடல் நலன் பற்றியும், தாதாசாகேப் பால்கே விருதுபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் சசிகலா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால், இந்த சந்திப்பின் பின்னணி பற்றி பலவிதமாக விவாதிக்கப்படுகிறது. அவர் உடல் நலம் தேறியும், விருதுபெற்றும் பல வாரங்கள் ஆகிவிட்டன. இவ்வளவு தாமதமாக திடீரென ரஜினியை அவரது வீட்டிற்கே சென்று சசிகலா சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த சந்திப்பில் அரசியல் சூழல் விவாதிக்கப்படாமலா இருந்திருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, கீழ்கண்ட இந்தக் காரணங்களுக்காக நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 1. அரசியல் ரீதியான அடுத்த கட்ட நகர்வுக்கு, சசிகலாவுக்கு பாஜகவின் உதவி தேவைப்படுகிறது. 2. அதிமுக நிர்வாகிகளில் பலர் தமக்கு ஆதரவாக இருந்தாலும், அவர்களால் வெளிப்படையாக இயங்க முடியவில்லை, எனவே, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை சமாதானப்படுத்தி, கட்சியில் தமக்கான அங்கீகாரத்தை பெறுவது அவசியம். 3. கட்சியில் அங்கீகாரம் பெற்றுத்தரும் அதே நேரம், வழக்குகள் நெருக்கக் கூடாது. 4. பாஜக தமக்கு தேவையானதைச் செய்தால், மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெற்றுத்தர முடியும். 5. டிடிவி தினகரனை இணைக்க அதிமுக இரட்டையர்கள் சம்மதிக்காவிட்டால், அவர், பாஜகஅதிமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தனிக்கட்சியாகவே இயங்குவார்.   

இந்த அனைத்து அம்சங்களையும் ரஜியினிடம் தெளிவாக எடுத்துரைத்த சசிகலா, இவற்றை பாஜக அதிகாரமட்டத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறியிருக்கலாம். சந்திப்பின் சாராம்சத்தை தெரிந்துகொண்ட அதிமுக தலைமை, இதுபற்றி ஆலோசித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் சசிகாவை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் தர வேண்டாம் என பாஜக அதிகார மட்டத்துக்கு தெரியப்படுத்த ஈபிஎஸ் அணியினர் தயாராகி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற சிங்கங்கள் கட்டியாண்ட கட்சியை, பாஜக வழிநடத்தும் நிலை வந்துவிட்டதே என சீனியர் நிர்வாகிகள் பொங்குகிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*