11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் நெருக்கடியாகவே இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள கள ரிப்போர்ட் அதிமுக முகாமை உற்சாகமடைய வைத்துள்ளது.
வார்டு வரையறை பிரச்னைகள், வெள்ள பாதிப்பு, கொரோனா மூன்றாம் அலையைக் காரணம் காட்டி இன்னும் கொஞ்ச காலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடலாம் என நினைத்திருந்த தி.மு.க., தற்போது தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்ட குழப்பங்கள், பெண்களுக்கு அளிப்பதாகச் சொன்ன 1,000 ரூபாய் உரிமைத் தொகை, நீட் விலக்கு, நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் எனச் சில விவகாரங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக நினைத்ததாலேயே , திமுக தேர்தலை தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கியதாக கூறப்பட்டது.
இந்தத் தேர்தலில் நூறு விழுக்காடு வெற்றி பெற்றாக வேண்டும் என திமுக தலைமை திட்டமிடுகிறது. தவறினால், ஆட்சி மீதான மக்கள் பார்வை மாறிவிடும் என முதலமைச்சர் கருதுகிறார். எனவே தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் சவாலாக இருக்கும். இந்நிலையில், வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, உளவுத்துறை ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே ஆளும் திமுக தயாராகி வருவதாக தெரிகிறது.
அதேநேரம், நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி எனத் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல், இரட்டை தலைமைகளுக்குள் உள்ள முரண்கள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்குள் சிக்கியுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்ந்துபோயுள்ளனர். இந்நிலையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், தனக்கு நெருக்கமான தனியார் அரசியல் ஆய்வு நிறுவனங்கள் உதவியுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்துள்ளார்.
அதில், “வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி சதவீதம், அவர்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கும், அதிகமாகவும் இருக்காது. ஏனெனில் பொங்கல் பரிசில் அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல ரூ.2,500 வழங்கப்படும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக அரசு பணம் வழங்காததால் அவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பரிசுத் தொகுப்பு தரமின்றி இருந்ததால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதுவும் மகளிர் இடையே அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பசையான விஷயத்தை இறக்க வேண்டும். அதுவும் இரண்டு கட்டங்களாக இருந்தால் மக்கள் மனங்களில் அழுத்தமாக இடம் பிடித்துவிடலாம். கூட்டணியை பொறுத்தவரை பாமகவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஒன்று ரகசியக் கூட்டணி, இல்லையெனில் அக்கட்சி தலைவர்களை வளைப்பது என இரண்டு அஸ்திரங்களை பயன்படுத்தலாம்” என அந்த சர்வே முடிவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சர்வே ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தனது கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கியத் தலைவர்களை அழைத்து, கள நிலவரத்தை எடுத்துரைத்து, தேர்தல் வேலைகளை முழுவீச்சில் முடுக்கிவிடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் தவறுகளை முழுவதுமாக மக்களிடம் கொண்டு செல்லுமாறு அப்போது அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில், அதிமுகவில் இருந்து தான் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு சோர்வில் இருந்த அதிமுக-வினரை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry