பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசு தேசத் துரோகம் செய்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி இந்தியாவில் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் பல பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் செல்போன் எண்களும் இடம்பெற்றிருந்தன. இந்தச் செய்தி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கம் பெகாசஸ் மென்பொருளை 2017-ம் ஆண்டு இஸ்ரேலிடமிருந்து விலை கொடுத்து வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இந்திய பிரதமர் மோடி 2017-ம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றதாகவும், அந்தப் பயணத்தின்போது ஏவுகணை அமைப்பு, பெகாசஸ் உளவு மென்பொருள் ஆகியவை அடங்கிய 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்துக்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இந்தத் தகவல் இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
Source : The Battle for the World’s Most Powerful Cyber Weapon
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில், இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு இந்த பெகாசஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப்படைகள், நீதித்துறை என அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசாங்கம் தேசத்துரோகம் செய்துவிட்டது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Modi Govt bought Pegasus to spy on our primary democratic institutions, politicians and public. Govt functionaries, opposition leaders, armed forces, judiciary all were targeted by these phone tappings. This is treason.
Modi Govt has committed treason.
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2022
ராகுல் காந்தியைப் போல், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry