குற்றப் பின்னணி இருந்தால் சீட் இல்லை! ‘திராவிட மாடல்’ திமுக அரசு! கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்!

0
113

வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபாடு கொண்டு இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அந்த ஊக்கம், தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பரவலாகவும் பாங்காகவும் சீராகவும் சிறப்பாகவும் அமைந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என் விருப்பம்.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது, வாக்கு சேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது, என ஒவ்வொரு கட்டத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.

மாவட்ட – ஒன்றிய – நகர அளவில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், அவரவர்தம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கூட்டணி கட்சியினருக்கு உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கமின்றிச் செயல்பட வேண்டும். கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் நம் கட்சியினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும், வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.

கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க. போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கட்சி தலைவர் என்ற முறையில் அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மக்கள் வழங்கவிருக்கும் வாக்குகளால் வெற்றி பெறக்கூடிய வார்டு உறுப்பினர்கள், மறைமுகத் தேர்தலில் தேர்வு செய்யப்படவிருக்கும் மேயர்கள் – சேர்மன்கள் உள்ளிட்டோர்தான் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை உரிய முறையில் ஒழுங்கு படுத்திக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்திலே இருக்கிறார்கள்.

குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை நம்முடைய நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும்.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலையுடன் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சொந்த விருப்பு – வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது. நம்முடைய வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களைப் போலவே கூட்டணி கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் முழுமையான ஒருங்கிணைப்பும், உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் களப்பணியும் அமைதல் வேண்டும். கடந்த 8 மாதங்களில் நமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் குறித்து சரியாக எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள்.

அமைதியான சூழலும் – நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டைப் பாழ்ப்படுத்த நினைப்பதை எடுத்துக் கூறுங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள்.

சமூகநீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மதநல்லிணக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ அரசாக விளங்கும் தி.மு.க. அரசின் திட்டங்களும், செயல்பாடுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள்.

அன்றும் இன்றும் மக்கள் நம் மீதே மாறா நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம்; நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry