நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! தனித்து போட்டியிடும் பாமக! அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு!

0
91

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
அத்துடன் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் தனித்து நின்றது. அதிமுக தலைமை தொண்டர்களை சரியாக கட்டுப்படுத்தவில்லை, அதிமுக தலைமை வலுவாக இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் வைத்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. இதைத்தொடர்ந்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ், எம்பி அன்புமணி ஆகியோர் கட்சி கூட்டங்களில் பேசி வந்தனர். அதன்படியே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரிலுள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “இந்த தேர்தலில், பெண்கள், வழக்கறிஞர்கள், புது முகங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மற்ற கட்சி வேட்பாளருக்கு பாமக-வினர் யாராவது உதவி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி தொகுதிகளில் எஸ்சி பிரிவினருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம். அதேபோல் பொது பிரிவிலும் எஸ்டி பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். பிராமணர் தொடங்கி எல்லா சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கி இருக்கிறோம். பாமக வேட்பாளர்களில் புது முகம், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்தவர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாமகவில் எப்போதும் மருத்துவர் ராமதாஸ் சொல்வதே வேத வாக்கு. அவர் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். பாமகவின் வளர்ச்சிக்கு உதவ கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று நம்புகிறோம். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாமகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry