உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி! அண்ணாமலைக்கு கடும் நெருக்கடி! உற்சாகத்தில் நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம்!

0
189

வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் வாக்குகள் பெருமளவுக்கு சிதறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மிகக்குறைந்த அளவு வாக்கு சதவிகிதத்தைப் பெற்றால், அது அண்ணாமலையின் தோல்வியாகவே பார்க்கப்படும்.

கூட்டணி

காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை திமுக கூட்டணியில் உள்ளன. திமுக கிள்ளிக் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்வதைத் தவிர இக்கட்சிகளுக்கு வேறு வழியில்லை. திமுக இல்லையென்றால், தேசிய அளவிலேயே அடையாளத்தை இழந்துவிடுவோம் என்பது காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தெரியும். கோழியைப்போன்று கூட்டணிக் கட்சிகளை அடைகாக்கும் திமுக, பெயரளவுக்கு சீட் ஒதுக்குகிறது.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் ஜி.கே. வாசன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி போன்றவர்கள் இருக்கிறார்கள். பாஜக வெளியேற்றப்பட்டது அல்லது வெளியேறிவிட்டது. சென்னை மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் சிவகாமி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பத்து முனைப்போட்டி

1. திமுக கூட்டணி
2. அதிமுக கூட்டணி
3. நாம் தமிழர் கட்சி
4. பாஜக
5. பாமக
6. மக்கள் நீதி மய்யம்
7. அமமுக
8. தேமுதிக
9. விஜய் மக்கள் இயக்கம்
10. சுயேட்சைகள்

இதில் நோட்டாவையும் சேர்த்தால் 11 முனைப் போட்டியாகிவிடும். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிகளும் இருப்பதை கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக முக்கிய கவனம் ஈர்ப்பவர்கள் சுயேட்சைகள். அனைத்து ஊர்களிலும் 10 முனைப் போட்டி இருக்காது என்றாலும், பெரும்பாலான ஊர்களில் குறைந்தது 5 – 6 முனைப் போட்டி நிலவ வாய்ப்புண்டு.

திமுக கணக்கு

ஏற்கனவே பெற்ற ஹாட்ரிக் வெற்றி( 2019 மக்களவைத் தேர்தல், 2019-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல்), ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுடன் திமுக வலுவாகக் களமாடுகிறது. 90% வெற்றி என்பது திமுக தலைவர் ஸ்டாலினின் இலக்கு. 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விட்டதையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும் என்பது திமுக-வின் கணக்கு. எனவே ஸ்வீட் பாக்ஸ் எண்ணிக்கையைப் பற்றி திமுக அலட்டிக்கொள்ளவில்லை.

அதிமுக வியூகம்

பாரம்பரிய வாக்கு வங்கி, அதிமுக-வுக்கு என உள்ள இந்துத்துவ வாக்கு வங்கி ஆகியவற்றுடன், திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குளை பற்றிவிட அதிமுக வியூகம் வகுத்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குளறுபடி, இல்லதரசிகளுக்கு ஊக்கப்பணம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்று வாக்குகளாக மாற்றுவதும் அதிமுக-வின் திட்டம்.

சதவிகிதக் கணக்கு

மொத்த வாக்காளர்களில் சற்றேறக்குறைய 15% சிறுபான்மையினர் வாக்குகள். சுமார் 35 லட்சம் வாக்குகள் உள்ள கத்தோலிக்க கிறித்துவர்கள் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல், 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதாக கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று கட்சிசாரா இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி இருக்கிறது. ஆனாலும், 8-10% வாக்குகள் திமுக பெற்றுவிடும்.

அமமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, விஜய் மக்கள் இயக்கம், சுயேட்சைகள் சேர்த்து சுமார் 10 சதவிகித வாக்குகளை பெறக்கூடும். எனவே, 75% வாக்குகளை குறிவைத்துத்தான் அதிமுக, நாம் தமிழர், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் நகர்வு இருக்கும்.

களத்தில் கட்சிகளின் நிலை

திராவிட முன்னேற்ற கழகம்

திமுக ஆட்சி மீது பரவலாக அதிருப்தி இருப்பது தெரிகிறது. ஆனால், அவை எதிரணிக்கு வாக்குகளாக மாறுவது சந்தேகம்தான். மேயர், தலைவர், துணைத் தலைவருக்கு மறைமுத் தேர்தல் நடப்பதால், ஆட்சி அதிகாரம் திமுக-வுக்கு கைகொடுக்கும். 21 மேயர் பதவிகளும் திமுக வசம்தான் இருக்கும். ஏற்கனவே திட்டமிட்டுள்ள கடைசி நேர இனிப்பு விநியோகம் திமுக-வுக்கு கூடுதல் பலம்.

அண்ணா திமுக

அதிமுக-வைப் பொறுத்தவரை போட்டியிடும் வேட்பாளர்களாகட்டும், முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானவர் ஆகட்டும், பர்ஸைத் திறக்க மறுப்பதன் தாக்கம் களத்தில் எதிரொலிக்கும். வெற்றியை கவுரவரப் பிரச்சனையாகப் பார்க்கும் அதிமுக வேட்பாளர்கள் சொந்த பணத்தை செலவழித்து வாக்குகளை பெறலாம். சம்பாதித்தை முடிந்துகொண்டு, கட்சிக்கான வாக்கு வங்கியை நம்புவது உள்ளாட்சித் தேர்தலில் கைகொடுக்காது.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி வழக்கம்போல உற்சாகத்துடனேயே களம் காண்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற 6.8% வாக்குகள், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து ஆகியவற்றுடன் இளைஞர்கள் வாக்குவங்கி அதிகரித்திருப்பதுதான் அக்கட்சிக்கு வைட்டமின் ப. எனவே வழக்கம்போல தனித்து களமிறங்கிவிட்டது. சமூக ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக இயங்குவதால், நகர்ப்புறங்களில் ஆதரவு பெருகி உள்ளது. பெரும்பாலும் சாமானிய இளைஞர்கள் என்பதால், எதிர்பார்ப்பின்றி தேர்தல் களத்தில் நிற்கின்றனர். சீமான் முன் வைக்கும் கொள்கை – கோட்பாடுகளும் இளைஞர்களை ஈர்த்துள்ளதால், இத்தேர்தலில் சீமான் தம்பிகள் கூடுதல் வாக்குகளை பெற சாத்தியமுண்டு.

பாரதிய ஜனதா கட்சி

ஏற்கனவே ஒத்த ஓட்டு பாஜக என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக தனித்து போட்டியிடுவது, திக்குத் தெரியாத காட்டில் இறக்கிவிடப்பட்டதற்கு சமம். 12,838 பதவியிடங்களுக்கு அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். கூட்டணி முறிந்ததால், அதிமுக-வின் இந்துத்துவ வாக்கு வங்கி கைகொடுக்காது. இதையெல்லாம் தாண்டி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் மிகப் பெரிது.

எனவே இந்தத் தேர்தல், அண்ணாமலைக்கு ஆசிட் டெஸ்ட். சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு சதவிகிதத்தை பெற முடியாவிட்டால், திராவிடவியலாளர்களை சமாளிப்பது அவருக்கு குதிரைக் கொம்பாகிவிடும். அண்ணாமலையின் தோல்வியாகவே அது பார்க்கப்படும். பாண்டே, மாரிதாஸ் போன்ற 4 – 5 யூடியூபர்களும், கிஷோர் கே சுவாமி போன்ற சமூக ஊடகவியலாளர்களும் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்களால், கட்சிக்கு புதிய வாக்கு வங்கியை ஏற்படுத்திவிட முடியாது. நடுநிலை ஊடகர்களையும், வாக்காளர்களையும் அடையாளம் காண முடியாதது அண்ணாமலையின் பலவீனம். தமிழகத்தில் அமலில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் தெரியப்படுத்த இயலாத நிலையில்தான் தமிழக பாஜக உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், சொந்த சமூக பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது. நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நெல்லை, தென்காசி தவிர ஏனைய 7 மாவட்டங்களும் பாமக பலமாக இருப்பதாக கருதப்பட்டதுதான். அத்தேர்தலில் 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 47-ல் மட்டுமே பாமக வென்றது. ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியைக் கூட பெற முடியவில்லை. இதன் தாக்கமாக, 12,838 பதவியிடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதே கடினமாக இருக்கும். களமாடப் போகிறவர்களுக்கு தலைமையிடமிருந்து வைட்டமின் ப கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால், கட்சியினர் பின்வாங்குவார்கள். எனவே, இந்தத் தேர்தல் பாமக-வுக்கு சவாலானதாகவே இருக்கும்.

தேமுதிக – அமமுக – மநீம

விஜயகாந்த் ஆரோக்கியத்தோடு இருந்தவரை கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அவர் உடல் நலம் குன்றிய நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 0.48% வாக்குகளை மட்டுமே பெற்றது. தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளில் தேமுதிக-வும் ஒன்று என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. வேட்பாளர்களை தேடிப்பிடித்து நிறுத்தவே அக்கட்சி பாடுபட வேண்டியிருக்கும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இந்தத் தேர்தல் அக்னிப் பரீட்சைதான். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை தினகரனால் பிரிக்க முடிந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவும் வெளிப்படையாக ஆதரவுக்குரல் கொடுக்க மாட்டார். தேர்தல் செலவுக்கு தலைமையை எதிர்பார்க்க வேண்டாம் என தினகரன் கூறிவிட்ட நிலையில், மொத்தமுள்ள 12,838 பதவிகளுக்கு, அமமுக சார்பில் 20-25% வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்குவார்கள் என்பதே கள நிலவரம்.

கமல்ஹாசனை பொறுத்தவரை, மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற மக்களுக்கான கட்சி என மறைமுக பெருமிதம் உண்டு. எனவே, இந்தத் தேர்தலில் முத்திரை பதிக்க முடியும் என நம்புகிறார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, இந்த கைகூடுமா என்பது சந்தேகமே. கமல்ஹாசனாலும் அனைத்து பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியாது என்பதே நிதர்சனம்.

விஜய் மக்கள் இயக்கம் – சுயேட்சைகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. கவுன்சிலர்களை அழைத்து விஜய் பாராட்டினார். எனவே இந்தத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகவே வலம் வருகிறார்கள். பரவலாக சுயேட்சையாக மனுத்தாக்கலும் செய்துள்ளனர். அவர்களுக்கென பிரத்யேக சின்னம் இல்லை என்ற நிலையிலும், இயக்க கொடியை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு இயக்கத்தின் கொள்கை முக்கியமல்ல என்பதால், உறவுமுறை கூறி வாக்காளர்களை அழைத்தபடி நம்பிக்கையுடன் களமாடுகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆனால், விஜய்யின் அரசியல் பயணத்துக்கு இந்தத் தேர்தல் எந்த வகையிலும் உதவாது.

முக்கிய கட்சியினரை கலங்க வைப்பதே சுயேட்சைகள்தான். இவர்கள் தங்களது குடும்ப வாக்கு, உறவினர்கள் வாக்குகளை அப்படியே லபக்கிவிடுவார்கள். மறுபுறம், முக்கிய கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள், அதை தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக கருதி, சுயேட்சையாக நின்று பெருமளவு செலவு செய்து வெற்றி பெறுவார்கள். களத்தில் இருந்து விலகுமாறு சுயேட்சைகளிடம் பெரிய கட்சிகள் பேரம் பேசுகின்றன. அதேபோல், கவுன்சிலராக வெற்றி பெற்ற சுயேட்சையை ஆளும்கட்சி இழுக்கும் படலமும் காத்திருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலில் வாக்குகள் பெருமளவு சிதறக்கூடும். வரும் 19-ந் தேதி வாக்குப் பதிவும், 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. அதுவரை காத்திருப்போம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry