கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் மசோதா! ஆளுநரின் முழு விளக்கம்! 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்!

0
200

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.

நீட் மசோதா தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாவை ஆளுநர் கவனமாக பரிசீலித்தார். நீட் கொண்டு வருவதற்கு முன்பு மருத்துவ சேர்க்கையில் கடைபிடிக்கப்பட்ட சமூக நீதி, குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்ததில், சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள மசோதா, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பான காரணங்களை விரிவாக விளக்கி, மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 1ஆம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஏற்கனவே, மத்திய அரசுக்கு எதிராக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றமானது ஒட்டுமொத்தமாக அலசி ஆராய்ந்து, குறிப்பாக சமூக நீதிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, ஏழை மாணவர்களுக்கு எதிரான பொருளாதாரச் சுரண்டலை தடுக்கும் என்பதாலும், சமூக நீதி மேம்படும் என்பதாலும் நீட் தேர்வுக்கு ஆதரவாக நிலைநிறுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கதல்ல என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிஸ், “ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை விளக்குவதோடு, இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 05.02.2022 அன்று காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அந்தக் குழு வழங்கியது.

இதையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பேரவையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவை காலம் தாழ்த்தால் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்குமாறு கோரினார். எனினும், மசோதா தொடர்பாக ஆளுநர் மாளிகை எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் இருந்தது. தமிழகத்தை சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள், நீட் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்தனர். மூன்றாவது முறையாகவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு தேவையில்லை என்றார்.

இதையடுத்து ஆளுநர் ரவி தனது குடியரசு தின செய்தியில், “தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது, அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதற்கு முன்பாக ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே, அரசு மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்தமைக்கு நன்றி, இதன் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்று பேசினார்.

இதனால் வெகுண்டெழுந்த திமுக, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநரை எச்சரிக்கும் விதமாக கட்டுரை எழுதியது. `கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!’ என்ற தலைப்பிலான அந்தக் கடுரையில், ஆளுநர் ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லையை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், `கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா’ எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.” என்று சாடியிருந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry