பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? மனிதநேயமின்றி செயல்படும் பள்ளிக்கல்வி ஆணையர்! கூனிக்குறுகுவதாக குமுறும் ஆசிரியர்கள்!

0
1806

90% விழுக்காடு பெண் ஆசிரியர்கள், கலைஞர் நீண்டகாலமாக சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பணிச் சுமையால் அவர்கள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஆசிரியர் சமுதாயத்தின் இதயம் திறந்த, உணர்வுகளின் தொகுப்பு மடல் என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ அன்றாடம் பள்ளிக்கல்வித் துறையால் ஆசிரியர் சமுதாயம் சேதாரபட்டு வருவதையும், அவமானங்களுக்கு ஆளாகி வருவதையும் தாங்கமாட்டாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மதிப்புமிகு ஓபிஎஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையினை ஊடகங்களில் பார்க்கிறபோது சீத்தலைச்சாத்தனார் அவர்கள் கூற்றுப்படி எழுத்தாணி கொண்டு எங்கள் தலையில் நாங்கள் குத்திக் கொள்ளாவிட்டாலும், எங்கள் கரங்களால் எங்கள் தலையில் நாங்கள் குட்டி கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

ஆசிரியர்கள் சங்கம்
வா. அண்ணாமலை

பள்ளிக் கல்வித்துறை எவர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? பள்ளிக்கல்வித் துறை ஆணையர், ஒருங்கிணைந்த திட்ட இயக்குனர் இவர்கள் இரண்டு பேரின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என தெளிவாக தெரியவருகிறது. மதிப்புமிகு ஓபிஎஸ் அவர்கள் அறிக்கையில் தெரிவித்தவாறு, பள்ளியில் படிக்கின்ற வயதுக்கு வந்த மாணவிகளிடம், பெண் ஆசிரியர்களாகவே இருந்தாலும், பெண்களுக்கே உரிய இயற்கை பாதிப்பு (பீரியட்ஸ்) தன்மையினை கேட்டறிந்து, அதை எமிஸ்(EMIS) இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டுமாம்.

பெற்ற தாயிடம் கூட சொல்வதற்கு கூச்சப்படும் பெண் குழந்தைகள் பலர் உள்ளார்கள். அதுபோல் மாணவர்களிடம் அன்றாடம் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கிறதா? இல்லையா?, சிறுநீர் கழிக்கும்போது எப்படி இருக்கிறது? என கேட்டு அதையும் பதிவு செய்ய வேண்டுமாம். தமிழகத்தில் ஆண் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுடைய நிலைமை என்னவாகும்? அதேபோல பெண் ஆசிரியர் இல்லாத இடத்தில் ஆண் ஆசிரியர்களின் நிலைமை என்னவாகும்?

தமிழ்நாட்டில் இதுவரையில் நடைபெற்ற எந்த ஆட்சியிலும் இது போன்ற கேள்விகள் கேட்டு பதிவு செய்கின்ற ஒரு அவலநிலை ஏற்பட்டதில்லை. இந்தியா முழுவதும் சுற்றி வருகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு, எந்த மாநிலக் கல்வித் துறையிலும் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் முறை பள்ளிக் கல்வித்துறையில் இல்லவே இல்லை என்பதை அறிவோம். அடுத்து, அன்றாடம் மாணவர்களை அழைத்து நேற்று இரவு என்ன சாப்பிட்டாய்? பிடித்து சாப்பிட்டாயா? பிடிக்காமல் சாப்பிட்டாயா? இன்று காலை என்ன உணவு சாப்பிட்டாய்? பள்ளியில் வழங்கப்படும் சத்துணவின் சுவை எப்படி இருக்கிறது? இவை எல்லாவற்றையும் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமாம்.

மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, ஐ ஸ்கிரீன் டெஸ்ட், உயரம் – எடை, பிஎம்ஐ, பள்ளி நலத்திட்டங்கள், நூலகப் புத்தகங்கள், சாலா சித்தி, பள்ளி மேம்பாட்டுத்திட்டம் என எல்லாம் குறிக்க வேண்டுமாம். எமிஸ் இணையதளம் செவ்வாய் கிரகத்திலிருந்து இயக்கப்படுகிறதா என்ன? மாணவர்கள் கூச்சப்படும் அளவுக்கு இந்த கேள்விகளை எல்லாம் கேட்கச் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யச் சொன்னது யார்? அவர்களுடைய முக அடையாளம் எங்களுக்கு முதலில் தெரிய வேண்டும். இது பள்ளிக்கல்வித்துறையா? எமிஸ் இணையதளத் துறையா? பள்ளிக்கல்வி புள்ளி விபரத்துறையா? எதைச் சொல்லி அழைப்பது? என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆசிரியர்களையும் ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளிக்கு வரச் செய்து கூட்டம் நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இருந்து இது நாள் வரையிலும் தமிழகத்தில் இது போன்று இல்லை. இந்த மனித நேயமற்ற மனப்போக்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையரால் நடத்தப்படுகிறது. 90% பெண் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்த பள்ளிக் கல்வித்துறையால் கொடுக்கப்படுகின்ற தேவையற்ற பணிச்சுமையினால் ஏற்படும் வேதனை உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல், நெஞ்சுக்குள்ளேயே அந்த உணர்வுகளை சுமந்து வருகிறார்கள் என்பதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டுவருகிறோம். ஆசிரியர் சங்கங்களினுடைய முதல் கோரிக்கை, ஏழை எளிய மாணவர்களுக்கு எங்களை பாடம் நடத்த அனுமதியுங்கள் என்பதாகும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாரதியாரால் போற்றப்படும் தமிழ்நாட்டில், நமது அரசு என்று உரிமையுடன் அழைக்கப்படும் அரசிடம் கேட்கிறோம்; மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதியுங்கள்…! அனுமதியுங்கள்…!. இந்தக் கைபேசியை வைத்துக்கொண்டு கிராமங்களில் சிக்னல் கிடைக்காமல் மன நிலை பாதித்தவர்கள் போல் இங்கும் அங்கும் சுற்றி சுற்றிவரும் பரிதாப நிலை இனியும் தொடர வேண்டாம். பிரதமர் மோடி அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய கல்விக் கொள்கை எவ்வித ஆரவாரமின்றி தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தவிர, வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.

கொரனா பெருந்தொற்று பாதிப்பால் 19 மாத காலம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வந்த மூன்று மாதமும் ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதிக்காமல் புள்ளி விபரம், பயிற்சி என்று ஆசிரியர் பணியினை செய்ய விடாமல், ஆசிரியர்கள் பள்ளியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களாகவே இருந்து வருகிறார்கள். நம்மிடையே உள்ள சில இந்திய ஆட்சிப் பணித் துறையினர், நவீன குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை எந்த இடத்திலும் ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறோம்.

கல்வித்துறையால், நாளுக்கு நாள் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கொடுமைச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மகளிர் தினம் கொண்டாடி மகிழ்கிறோம்; மகளிருக்கு 50% சதவீத விழுகாடு தந்து மகிழ்கிறோம்; ஆனால் ஒரு நாள் கூட விடுமுறை விடாமல் பெண்களுக்கு பெரும் மன பாதிப்பினைத் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது என்பதனை எதார்த்த உணர்வுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் வீரமிக்க பல போராட்டங்களை நடத்தி சிறை தியாகம் செய்தவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தான், இன்னமும் ஆசிரியர் சங்கங்களிடையே நிலைத்து நின்று வருகிறோம். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு நிழலில் வளர்ந்தவர்கள், இனமான பேராசிரியர் அவர்களுடைய தன்மானமிக்க, உணர்வான உரை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். நமது அரசு என்ற பாசறைக் கட்டுப்பாட்டில் கூனிக்குறுகி அமர்ந்திருக்கிறோம். 90% விழுக்காடு பெண் ஆசிரியர்கள், கலைஞர் நீண்டகாலமாக சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை சத்தியபிரமாணமாக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

எதைக்கேட்டாலும் மேலிடத்தில் இருந்து வருவதை நாங்கள் செய்கிறோம் என்கிறார்கள். அந்த மேலிடம் என்பது எங்களுக்கு எவை? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டின் விடியல் என்று பெருமையுடன் அழைக்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், ஆசிரியர் சமுதாயத்திற்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கை உணர்வுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்” இவ்வாறு வா. அண்ணாமலை தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry