ஐ.சி.யு.-வில் காங்கிரஸ்! உ.பி.யில் 387 இடங்களில் டெபாசிட் காலி! மக்கள் நிராகரித்த மத அரசியல்! விஸ்வரூபமெடுக்கும் ஆம் ஆத்மி!

0
86
CONGRESS

ஐந்து மாநில தேர்தலில் பெற்ற மோசமான தோல்வியால், காங்கிரஸ் பல வகையிலும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் முன்வைத்த சாதி – மத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், குலாம் நபி ஆஸாத், கபில் சிபல் உள்பட அதிருப்தி தலைவர்கள்(G23 தலைவர்கள்) சோனியா காந்தியின் தலைமைக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநில தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் இருத்தியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தேசிய அரசியலில், காங்கிரசுக்கு மாற்று சக்தியாகவே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பார்க்கப்படுகிறது. இரண்டு கட்சிகளுமே தலா இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ் இப்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆம் ஆத்மியின் விஸ்வரூபம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஐ.சி.யு.வில் இருக்கும் காங்கிரசுக்கு அமைப்பு ரீதியான மாற்றம் தேவைப்படுகிறது.

VELS ME

காங்கிரஸின் வாக்குகளை கபளீகரம் செய்து, டெல்லி, பஞ்சாப்பில் வலுவான சக்தியாக ஆம் ஆத்மி உருமாறியுள்ளது. அக்கட்சியின் அடுத்த இலக்கு குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக மேலும் பலவீனப்படும்போது, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆம் ஆத்மியில் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பஞ்சாப்பின் எல்லை மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. இது காங்கிரசுக்கு மேலும் பெரிய இழப்பாக இருக்கும். காங்கிரஸின் தோல்வி, ஆம் ஆத்மி வெற்றி ஆகியவை, மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான்

5 மாநில தேர்தல் தோல்வி, ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையை பெரிதும் பாதிக்கும். இந்த ஆண்டு ராஜ்யசபாவில் 48 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் எண்ணிக்கை 26 ஆகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாபில் 3 ராஜ்யசபா இடங்களையும், அசாமில் 2 இடங்களையும், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தலா ஒரு இடங்களையும் காங்கிரஸ் இழக்க உள்ளது. பஞ்சாபில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து 3 மற்றும் பஞ்சாபில் இருந்து 7 என ஆம் ஆத்மி 10 உறுப்பினர்களுடன் ராஜ்யசபாவில் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸின், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஊசலாட்டத்தில் இருக்கிறது.

Rajya Sabha

காங்கிரஸ் கட்சிக்கு 2024 தேர்தலுக்கான பாதை கடினமானதாகவே இருக்கும். பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸை முன்னிறுத்த மாநிலக் கட்சிகள் ஒப்புக்கொள்ளாது. தாங்கள் அமைக்கும் கூட்டணியில் காங்கிரசும் இணையலாம் என்பதாகவே மாநில கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு இருக்கும். இதுவரை இல்லாத அளவு தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சியில் வலுவாக எதிரொலிக்கிறது.

பாஜக – காங்கிரஸ்  அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் மமதா பானர்ஜி, 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி விரும்பினால், 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று கூறுகிறார்.

TMC supremo and West Bengal Chief Minister Mamata Banerjee

ராகுல் காந்தி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்கள், டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்பட முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் தோல்வி, உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தும் கட்சி படுதோல்வியை சந்தித்தது, மோசமாகி வரும் கட்சியின் செயல்திறன், தலைமையின் ஆணவப்போக்கு, தொண்டர்களுக்கும் – தலைமைக்குமான இடைவெளி, மக்கள் மத்தியில் ஆதரவில்லாத தலைவர்கள் கட்சியை வழிநடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.

Kapil Sibal, Gulam Nabhi Azad

​​விரைவில் கூட்டப்பட உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி(CWC) கூட்டத்தின் போது, ​​கூட்டத்தில் விவாதித்த விஷயங்களுடன், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், கட்சிக்கு முழுநேர தலைவர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்த காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு தலைமை முழுமையாக பொறுப்பேற்பதுடன், தலைமைக்கு நெருக்கமான தலைவர்களால் எடுக்கப்படும் முடிவுகளை, விவாதித்து இறுதி செய்யும் அளவுக்கு உள்கட்சி ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் ஜி23 தலைவர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது. கட்சி வெற்றி பெற வேண்டுமானால், மாற்றம் இன்றியமையாதது என ஜி23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கூறியுள்ளார்.

“தேர்தல் முடிவால் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். மாநிலத்திற்கு மாநிலம் நம்முடைய தோல்வியைக் கண்டு என் இதயம் இரத்தம் கசிகிறது” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்கிறார் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான். இந்துத்துவா கொள்கையினால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்ற பிரச்சாரம் இனியும் எடுபடாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்?

Priyanka Gandhi

காங்கிரஸ் தலைமையின் நம்பகத்தன்மை குறைந்ததே தோல்விக்குக் காரணம். உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரியங்கா காந்தி 209 பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலைப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவரும், ராகுல் காந்தியும், ஹத்ராஸ், லக்கிம்பூர் கேரி சம்பவங்களை தேசியப் பிரச்சனையாகப் மாற்றினார்கள். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. உ.பி.யில் 399 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 387 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. சாதி – மதத்தை வைத்து பாஜக-வுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம், காங்கிரஸுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அதேபோல், பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கு உள்ளேயே சாதிப் பிரிவினையை தூண்டுவிட்டது காங்கிரஸ். அதுவும் இவர்களுக்கு எதிராகவே அமைந்துவிட்டது.

Sonia Gandhi, Rahul Gandhi

தேர்தல் தோல்வி நிரந்தரமானது அல்ல. ஆனால், கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தாமல், கோஷ்டி அரசியலை ஊக்குவித்தும், செல்வாக்கு இல்லாதவர்களை மாநில கமிட்டிகளுக்கு தலைவர்களாக நியமிப்பதும் தொடர்ந்தால், ஐ.சி.யு.வில் இருந்து காங்கிரஸ் வெளியே வர வாய்ப்பே இல்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry